பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
237

இருக்கின்ற கண்ணீரோடு பகவானுடைய குணங்களிலே உட்புகாநின்ற மனத்தையுடையவளாகி அந்தத் திசையையே உற்று நோக்கித் தொழா நிற்பாள்.

    வி-கு :- அன்னைமீர்! ஏழையைக் கொண்டுபுக்குப் பிரான் இருந்தமை காட்டினீர்; அன்றுதொட்டு மையாந்து நீரினொடு சிந்தையாளாகி உற்று நோக்கித் தொழும் என்க. ஏழை - ஆசையுடையவள். சிந்தையள் : வினையெச்சமுற்று.

    ஈடு :- ஐந்தாம்பாட்டு. 1இவள் தன்மையை அறிந்து வைத்து, தேவபிரானுடைய அழகினைக் காட்டிக் கெடுத்தீர்கோள் என்கிறாள். அன்றியே, அவ்வூரில் வாழ்கின்றவர்கள் படியைக் காட்டினால், அவர்கள் ஜீவனத்தையும் இவளுக்குக் காட்டிக் கொடுக்கவேணுமோ? என்கிறாள் என்னுதல்.

    குழையும் வாள்முகத்து ஏழையை - ஒரு கலவி வேண்டாமலே இயல்பிலே அமைந்த மிருதுத்தன்மையாலே நையும் தன்மையளாய், 2“உகந்து உகந்து உள்மகிழ்ந்து குழையும்” என்கிற பகவானுடைய அநுபவத்தாலே ஒளியையுடைத்தான முகத்தையுடையளாய், ‘கிடையாது’ என்றாலும் மீளமாட்டாத சாபலத்தையுடையவளை. தொலைவில்லி மங்கலம் கொண்டுபுக்கு - 3பகவானாலே விரும்பப்படுகின்ற தேசத்திலே கொடுபுகத் தவிராத பின்பு, ஸ்ரீ வைகுண்டத்திலே மேன்மையைக் காட்ட அன்றோ அடுப்பது! நீர்மைக்கு எல்லை நிலமான இடத்தே கொடுபுகுவார் உளரோ? வாள் - ஒளி. 4இழைகொள் சோதி - ஆபரணங்களினுடைய ஒளியையுடைத்தாயிருக்கும் என்னு

 

1. “குழையும் வாண்முகத்தேழையை” என்றதிலே நோக்காக அவதாரிகை
  அருளிச்செய்கிறார். மேற்பாசுரத்தின் அர்த்தத்தையும்
  அநுவதித்துக்கொண்டு, “இழைகொள் சோதிச் செந்தாமரைக்கண் பிரான்”
  என்றதிலே நோக்காக ‘அன்றியே’ என்று தொடங்கி வேறும் ஓர்
  அவதாரிகை அருளிச்செய்கிறார்.

2. பிரிந்திருக்கும் காலத்திலே முகத்தில் ஒளி உண்டாகைக்குக் காரணம்
  சொல்லுகிறார் ‘உகந்து’ என்று தொடங்கி.

3. “தொலைவில்லி மங்கலம் கொண்டுபுக்கு” என்கிறவளுடைய மனோபாவத்தை
  அருளிச்செய்கிறார் ‘பகவானாலே’ என்று தொடங்கி.

4. “இழைகொள் சோதி” என்பதற்கு மூன்று வகையாகப் பொருள்
  அருளிச்செய்கிறார். முதல் வகை, இழைகளினுடைய சோதியைக்
  கொண்டிருக்கிற விக்கிரஹம் என்பது. இழை சோதி கொள் என்று மாற்றுக.
  இரண்டாவது வகை, இழையாகையைக் கொண்டிருக்கிற ஒளியையுடைய
  விக்கிரஹம் என்பது. மூன்றாவது வகை, ஆபரணங்களின் ஒளியைத்
  தன்னுள் கொண்டிருக்கிற ஒளியையுடைய விக்கிரஹம் என்பது. மூன்றாவது
  பொருளில் “இழை” என்பதற்கு, ஆபரணங்களின் ஒளி என்று பொருள்
  கொள்க.