பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
458

திருச்சக்கரம் அன்றோ. 1பண்டே அவனைக் கைகண்டிருப்பவர்கள் அன்றோ. அவன் அருள் மறுத்தபோதும் இங்குத்தை அருள்மாறாதே அன்றோ இருப்பது. ஆகையாலே, அவன் திருவருளைப் பெற்றவர்கள் திருவாழியில் கூர்மையை அன்றோ தங்களுக்குத் தஞ்சமாக நினைத்திருப்பது.

    கூறாய் நீறாய் நிலனாகி-திருச்சரம்போலே “சிந்நம் பிந்நம்” என்கிற பரும்பணிக்கு விட்டுக்கொடாத திருவாழி. 2திருச்சரத்துக்கு, இதனை நோக்க ஒரு குணத்தின் சேர்க்கை உண்டு என்கிறார், 3முற்பட, இருதுண்டமாக்கிப் பின்னை நீறாக்கிப் பின்னை அது காண ஒண்ணாதபடி வெறும் தறையாக்கும். ஆகி - ஆக்கி. அல்லது, ஆகும்படி என்றுமாம். கொடு வல் அசுரர் - 4சீறுகைக்குக் காரணம் இருக்கிறபடி. கொடிய செய்லகளைச் செய்யக் கடவராய், ஒருவரால் வெல்ல ஒண்ணாதபடி வலியையுடையரான அசுரர். குலம் எல்லாம் - ஒருவன்செய்த குற்றமே ஜாதியாக முடிக்கவேண்டும்படி இருக்கையாலே, ஒருவரும் தப்பாமல் கோலி முடித்தபடி. 5அநுகூலரோடு பிரதிகூலரோடு வாசிஅற இவன் வளைவில் அகப்படாதார் இல்லை. 6“வளைவாய்த் திருச்சக்கரத்து எங்கள் வானவனார்” என்று, அவன் வளைவிலே அகப்பட்டுப் பின்பேயன்றோ மேல்போயிற்று. கூறாய்நீறாய் நிலனாகைக்குச் செய்த செயல் ஏது?

 

1. அவன் இவர்கள்பக்கல் செய்த திருவருளைத் திவ்வியாயுதங்கள்
  அறிந்தவாறு யாங்ஙனம்? என்ன, அதற்கு, ரசோக்தியாக விடை
  அருளிச்செய்கிறார் ‘பண்டே’ என்று தொடங்கி. “அருளார்” என்றதற்கு,
  பாவம் அருளிச்செய்கிறார் ‘அவன் அருள்’ என்று தொடங்கி. அதனால்
  பலித்த பொருளை அருளிச்செய்கிறார் ‘ஆகையாலே’ என்று தொடங்கி.

2. திருச்சரத்துக்கு, பரும் பணி வருகைக்குக் காரணம் யாது? என்ன, அதற்கு
  விடையை ‘திருச்சரத்துக்கு’ என்று தொடங்கி ரசோக்தியாக
  அருளிச்செய்கிறார். குணம் - வில்லின்நாணும், கிருபாகுணமும்.
  “சிந்நம்பிந்நம்” என்பது, ஸ்ரீராமா. யுத். 94 : 22.

3. பரும் பணிக்கு விட்டுக் கொடாதபடியை விளக்குகிறார் ‘முற்பட’ என்று
  தொடங்கி.

4. “கொடு வல்” என்ற அடைமொழிகட்குப் பயன் அருளிச்செய்கிறார்
  ‘சீறுகைக்கு’ என்று தொடங்கி.

5. “திரு” என்ற சொல் அழகைச் சொல்லுகையாலே, அநுகூலரும், “நேமி”
  என்கையாலே, பிரதிகூலரும் அகப்படுவர்கள் என்கிறார் ‘அநுகூலரோடு’
  என்று தொடங்கி.

6. “அநுகூலர் திருவாழிக்கு அகப்படுவதற்குப் பிரமாணம் காட்டுகிறார்
  ‘வளைவாய்’ என்று தொடங்கி. இது, திருவிருத்தம், 70. ‘மேல் போயிற்று’
  என்றது, “வானவனார் முடிமேல்” என்கிறபடியே, மேல் சென்று
  ஈடுபட்டது என்றபடி.