த
திருவாய்மொழி
ஏழாம் பத்து
முதல் திருவாய்மொழி - ‘உண்ணிலாவிய’
முன்னுரை
ஈடு :
முதற்பத்தால், பகவத் கைங்கரியம் புருஷார்த்தம் என்று அறுதியிட்டார்; இரண்டாம் பத்தால்.
அந்தக் கைங்கரியத்தில் களையறுத்தார்; மூன்றாம் பத்தால், களையறுக்கப்பட்ட அந்தக் கைங்கரியமானது
பாகவத சேஷத்துவ பரியந்தமான பகவத்கைங்கரியம் என்றார்; நான்காம் பத்தால், இப்படிப்பட்ட
கைங்கரியத்திற்கு விரோதிகள் ஜஸ்வரிய கைவல்யங்கள் என்றார்; ஐந்தாம் பத்தால், அந்த
விரோதிகளைப் போக்குவானும் அவனே என்றார்; ஆறாம் பத்தால், விரோதிகளை அழிக்கும் இயல்பினனான
சர்வேஸ்வரன் திருவடிகளிலே சரணம் புக்கார்; இப்படிப் பெரிய பிராட்டியார் முன்னிலையாகச்
சரணம் புக்கவிடத்திலும், 1தக்தப்பட நியாயம்போலே சம்சாரம் தொடருகிறபடியைக்
கண்டு நோவுபடுகிறார் இந்த ஏழாம் பத்தால்.
_________________________________________________________________________
1. தக்தபடம் - எரிந்துபோன
வஸ்திரம். ‘மடிப் புடைவை வெந்தால் உண்டையும்
பாவும் ஒத்துக்கிடந்கும்: காற்று அடித்தவாறே
பறந்துபோம்’என்பது, ஸ்ரீ வசனபூஷணம்,
2-ஆம் பிரகரணம், சூ. 191.
|