பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

New Page 1

நான்காந்திருவாய்மொழி - பா. 6

177

    பொ-ரை : ‘பகற்காலம் நீங்கிய புல்லிய செவ்வானம் போலே, ஆகாயமும் திக்குகளும் சூழ எழுந்து இந்தப்பெருக்கு ஆகும்படியாக, மலை கீழேயாகும்படி மேலே இருந்துகொண்டு பிளந்த சிங்கத்தின் செயலை ஒத்திருந்தது. என்னப்பன் மிக்க துயரைச் செய்து அசுரனான இரணியனைக் கொன்ற தன்மையானது’ என்க.

    வி-கு :
செக்கர்-அந்தி வானம்; அந்தி நேரமுமாம். ‘புன்’ என்பது காலத்தின் சிறுமையைக் காட்ட வந்தது. சூழ எழுந்து உதிரப் புனலாக அசுரரைக் கொல்லுமாறு ஒத்தது என்க.

    ஈடு :
ஆறாம் பாட்டு. 1இரணியனைக் கொன்ற செயலை அருளிச்செய்கிறார்.

    போழ்து மெலிந்த- 2‘பெரும்பாலும் பகற்பொழுது போயிற்று’ என்னுமாறு போலே, பொழுது போகாநிற்கச்செய்தே. புன் செக்கரில்-செக்கர்வானம் இடுகிற அளவிலே. என்றது, ‘அவன் வரத்தில் அகப்படாத சந்தியா காலத்திலே’ என்றபடி 3‘இரவிலும் படகில்லேன்; பகலிலும் படகில்லேன்’ என்று வரங்கொண்டானே. வான் திசை சூழும் எழுந்து உதிரப் புனலா-பரப்பையுடைத்தான ஆகாசம் திக்குகள் அடங்கலும், பள்ளங்கொண்ட இடம் எங்கும் வெள்ளம் பரக்குமாறு போலே குருதியானது கொழித்துப் பரக்கும்படி. மலை கீழ்து பிளந்து சிங்கம் ஒத்ததால் - ‘ஒரு மலையைக் கீழே இட்டுக்கொண்டு மேலே இருந்து அதனைப் பிளந்த சிங்கத்தை ஒத்தது’ என்னுதல். அன்றிக்கே, ‘கிழித்துப் பிளந்த சிங்கத்தை ஒத்தது’ என்னுதல். அன்றிக்கே 4‘மகிழ்ந்து பிளந்த சிங்கத்தை ஒத்தது’ என்னுதல். ‘இரண்டு கூறு செய்து உகந்த சிங்கம்’ எனக்கடவது அன்றோ?

____________________________________________________________________

1. ‘ஆழ்துயர் செய்து அசுரரைக் கொல்லுமாறு’ என்றதனைக் கடாட்சித்து அவதாரிகை
  அருளிச்செய்கிறார்.

2. ‘போழ்து மெலிந்த’ என்பதற்குப் பிரமாணங்காட்டிப் பொருளும் அருளிச்செய்கிறார்,
  ‘பெரும்பாலும்’ என்று தொடங்கி. ‘பலித ப்ராயோ வாஸா;’ என்பது, பிரமாண
  வாக்கியம்.

3. ‘அப்படி வரம் உண்டோ?’ என்ன, ‘இரவிலும்’ என்று தொடங்கி அதற்கு விடை
  அருளிச்செய்கிறார். கம்பராமாயணம் இரணியன் வதைப்படலம் 11 முதல் 18 முடிய
  உள்ள செய்யுள்களைக் காண்க.

4. மூன்றாவது பொருளில் ‘மகிழ்ந்து’ என்ற சொல்லானது ‘கீழ்து’ என்று விகாரப்பட்டு
  வந்ததாகக் கோடல் வேண்டும். ‘இரண்டு கூறு’ என்பது, திருச்சந்த விருத். 62.