பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

முதல் திருவாய்மொழி - பா. 5

27

கையடைப்பாக்கி’ என்றபடி. நெகிழ்ப்பான் ஒக்கின்றாய்-1இதுவோ தான் எனக்கு நிலைநிற்கப் புகுகிறது? 2‘இங்ஙனே தான் செல்லுகிறதோ?’ என்று இருக்க ஒண்ணாதபடி உன் பக்கல் செய்த நம்பிக்கையையும் குலையாநின்றாய். 3‘ஆனால், நம் படி இதுவாகில், உமக்கு ஒரு பரிகாரம் தேடிக்கொண்டாலோ?’ என்றான்; ஆர்மருந்து இனி ஆகுவார்-4என் இடையாட்டம் பிறரைக்கொண்டு காரியம் இல்லை: நான் நோவுபடாநின்றேன். நீ கைவாங்கினாய். ஆன பின்பு எனக்கு ஒரு இரட்சகர் உளரோ? நானும் பிறரும் இல்லாத அன்று நீ உண்டு: நீ விட்ட அன்று யார் உண்டு? 5‘ஆனால் நீரோ?’ என்றான்; நானும் கையும் திருவாழியுமாய் இருந்தேனாகில் நான் என்னை நோக்கிக்கொள்ளேனோ? 6மருந்தாம் போதும் ஒரு சேதநன் வேணுமன்றோ? 7மருந்தும் பொருளும் அமுதமும் அவனே அன்றோ இவர்க்கு?

 

1. ‘‘நெகிழ்ப்பான் ஒக்கின்றாய்’ என்பது என்?’ இந்திரியங்கள் பாதகங்கள்’ என்னும்
  புத்தியைத் தந்தோமே?’ என்ன, ‘இதுவோதான்’ என்று தொடங்கி அதற்கு விடை
  அருளிச்செய்கிறார். ‘இதுவோதான்’ என்றது, ‘இந்திரியங்கள் பாதகங்கள் என்ற
  புத்தியோதான்’ என்றபடி.

2. ‘நிலை நில்லாமைக்கு அடி யாது?’ என்ன, ‘இங்ஙனேதான்’ என்று தொடங்கி அதற்கு
  விடை அருளிச்செய்கிறார். என்றது, ‘இவை பாதகங்கள் என்ற புத்தியோடு செல்லவும்
  ஒண்ணாதபடி, தேவர் திருவடிகளில் இருக்கும் நம்பிக்கையையும் நெகிழ்க்கைக்காக
  இருந்தாற் போலே இராநின்றாய்’ என்றபடி ‘இங்ஙனேதான்’ என்றது, ‘இவை
  பாதகங்கள் என்ற புத்தியோடேதான்’ என்றபடி.

3. ஆனால்’ என்றது, ‘நாம் கைவிடமாட்டோம் என்று உமக்குத் தோற்றுகிறதாகில்’
  என்றபடி. அதனை விவரணம் செய்கிறார், ‘நம்படி’ என்று தொடங்கி.

4. ‘இனி’ என்றதன் பொருளை அருளிச்செய்கிறார், ‘என் இடையாட்டம்’ என்று
  தொடங்கி, அதனை விவரணம் செய்கிறார், ‘நானும் பிறரும்’ என்று தொடங்கி.

5. ‘ஆர் மருந்து ஆகுவார்?’ என்பதற்கு, ‘வேறு உபாயங்கள் இரட்சகங்கள் ஆகமாட்டா’
  என்று பொருள் அருளிச்செய்த திருவுள்ளம் பற்றி, ‘அடல் ஆழி ஏந்தி’ என்றதற்கு
  அவதாரிகை அருளிச்செய்கிறார், ‘ஆனால் நீரோ’ என்று தொடங்கி.

6. ‘யாது மருந்து இனி ஆகும்?’ என்னாது, ‘ஆர் மருந்து இனி’ என்றதற்கு பாவம்
  அருளிச்செய்கிறார், ‘மருந்தாம் போதும்’ என்று தொடங்கி.

7. அதற்குப் பிரமாணம் காட்டுகிறார், ‘மருந்தும்’ என்று தொடங்கி. இது, மூன்றாந்
  திருவந்தாதி, 4.