பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

ஆறாந்திருவாய்மொழி - பா. 9

277

தாழ்ந்திருப்பது ஒரு செயல் இல்லையாயிற்று, இவன் செய்யுமவற்றில். 1‘கிரமத்திலே பலம் கொடுக்கிறோம்’ என்று சர்வேஸ்வரனுக்கு ஆறியிருக்க ஒண்ணாதபடியாயிற்றுக் கொடிய செயல்கள் செய்யும்படி. 2‘மிகக்கொடியனவான பாவங்கள், மிக உயர்ந்தனவான புண்ணியங்கள் ஆகிய இவற்றால் உண்டான பலன்களை இப்பிறப்பிலேயே மூன்று வருடங்களில் மூன்று மாதங்களில் மூன்று பக்ஷகளில் மூன்று நாள்களில் அனுபவிக்கிறான்’ என்னும்படியே. கடிய வினையே என்ற ஏகாரத்தால் இவன் நல்வினைத் தொடர்பு இல்லாதவன் என்பது பெறப்படும்.

    ஆண் திறல் மீளி மொய்ம்பில் அரக்கன் - ஆண்பிள்ளைத் தனத்தில் வந்தால், 3திறலையுடைய சிங்கம் போன்ற மிடுக்கையுடைய அரக்கன். மீளி-சிங்கம். அன்றிக்கே, ‘திறலையுடையனாய், பிறரை அடக்குதற்குரிய ஆற்றலையுடையனாய், யமனைப் போன்ற மிடுக்கையுடையனான இராவணனுடைய’ என்னுதல். குலத்தைத் தடிந்து- 4‘ஜனகராஜன் திருமகள் காரணமாகப் பிசாச ஜாதி அற்றதாயும் அரக்கர் குலம் அற்றதாயும் செய்வேன்’ என்கிறபடியே, குலமாக அழித்து.

____________________________________________________________________

1. ‘கடிய வினை’ என்றதற்குப் பொருள் அருளிச்செய்கிறார், ‘கிரமத்திலே’ என்று
  தொடங்கி.

2. மிகப்பெரிய பாவங்களும் புண்ணியங்களும் இப்பிறவியிலேயே பலன் கொடுக்கும்
  என்பதற்குப் பிரமாணம் காட்டுகிறார், ‘மிகக்கொடியனவான’ என்று தொடங்கி.

        ‘அத்யுத்கடை: புண்யாபாபை: இஹைவபலம் அஸ்நுதே
         த்ரிபி: வர்ஷை: த்ரிபி: மாஸை: த்ரிபி: பக்ஷை: த்ரிபி: திநை:’

என்பது, தர்ம சாஸ்திரம்.

      ‘மிகப்பெரிய அறஞ்செய்தாரும் மிகப்பெரிய பாவஞ்செய்தாரும் முறையானன்றி
  இம்மைதன்னுள்ளே அவற்றின் பயன் அனுபவிப்பார் என்னும் அறநூல் துணிபு
  பற்றி, இப்பேரறஞ்செய்தானும் கொல்லப்படான்’ என்பது திருக்குறள், 326,
  பரிமேலழகருரை.

3. ‘திறல்’ என்பதற்கு ‘மிடுக்கு’ என்றும், ‘பிறரை அடக்குதற்குரிய ஆற்றல்’ என்றும்;
  ‘மீளி’ என்பதற்குச் ‘சிங்கம்’ என்றும், ‘யமன்’ என்றும் பொருளாம்.

4. ‘கரிஷ்யே மைதிலீஹேதோ: அபிஸாசம் அராக்ஷஸம்’

என்பது, ஸ்ரீராமா. ஆரண். 64 : 66.