பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

புக

284

திருவாய்மொழி - ஏழாம் பத்து

    புக்கு அ அரி உருவாய் - அந்த அரி உருவாய்ப் புக்கு. 1அவ்வரியுரு என்னுமித்தனையாயிற்றுச் சொல்லலாவது. 2நரசிங்கமான வேடத்தைக்கொண்டு பகைவன் அண்மையிலே கிட்டி. அன்றிக்கே, இரணியன் உடலைப் பிளந்துகொடு புறப்பட்ட போதைக்கடுமை, புறம்பு இட்டு ஒருவன் வந்து செய்தானாகை அன்றிக்கே, உள்ளுநின்றும் ஒரு சிங்கம் பிளந்துகொண்டு புறப்பட்டாற்போலேயாயிற்று அதனைச் சொல்லுதல். அவுணன் உடல் கீண்டு உகந்த - இரணியன் உடலைப் பிளந்து போகட்டு, ‘சிறுக்கன் விரோதி போகப்பெற்றோம்!’ என்று உகந்தனாயிற்று. சக்கரச் செல்வன்தன்னை - 3இரணியனுடைய உடலுங்கூடத் திரு உகிருக்கு அரை வயிறாகப் போகையாலே, பின்னை அழகுக்குப் பத்திரங்கட்டின இத்தனையாயிற்று.

    குருகூர்ச் சடகோபன் சொன்ன - ஆழ்வார் அருளிச்செய்த. 4மிக்க ஓர் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார்-பகவத் விஷயத்தை உள்ள அளவும் சொன்ன ஆயிரத்திலும் வைத்துக்கொண்டு இப்பத்தையும் கற்றவர்களை. தொக்குப் பல்லாண்டு இசைத்துக் கவரி செய்வர் ஏழையர் - 5கிண்ணகத்தில் இழிவாரைப்போலே தனி இழிய ஒண்ணாமை திரண்டு கொண்டு, ‘பொலிக! பொலிக!’ என்று மங்களாசாசனம் செய்து, சர்வேஸ்வரன் பக்கல் செய்யக்கூடிய 6அசாதாரண கைங்கரியங்களையடைய இப்பத்தைக் கற்றவர்கள்

_____________________________________________________________________

1. ‘உக்ரம் வீரம்’ என்பது போன்ற மந்திரலிங்கத்தையும் திருவுள்ளம் பற்றி,
  ‘அவ்வரியுரு’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார்.

2. பதப்பொருள் அருளிச்செய்கிறார், ‘நரசிங்கமான’ என்று தொடங்கி. வேறும் ஒரு
  பொருள் அருளிச்செய்கிறார், ‘அன்றிக்கே’ என்று தொடங்கி. என்றது, ‘இரணியன்
  உடலிலே பிரவேசித்திருக்கிற அரியுருவாய்’ என்றபடி.

3. ‘சக்கரச் செல்வன்’ என்றதற்குக் கருத்து அருளிச்செய்கிறார், ‘இரணியனுடைய’
  என்று தொடங்கி. செல்வம்-திருவாழியால் வந்த அழகு. பத்திரம்-ஆயுதம்.

4. ‘மிக்க’ என்றது, ‘பகவானைப் பற்றிச் சொல்லுகிற ஆற்றலால் மிக்க’ என்றபடி.

5. கிண்ணகம்-ஆற்றுப்பெருக்கு.

6. அசாதாரணம்-பொதுவானது அன்று; ஒருவர்க்கே உரியது.