பக்கம் எண் :

160

சொல்ல அன்று முதல் நாதன் கோவிலாய் இருந்த இத்தலம்
நந்திபுரவிண்ணகரமாயிற்று.

     தற்போது நந்திபுரவிண்ணகரம் ஒரு மிகச் சிறிய கிராமமாகத்
திகழ்ந்தாலும் ஒரு காலத்தில் புகழ்பெற்றிருந்த தன்மையைப் பார்த்த
மாத்திரத்தில் உணரமுடிகிறது.

மூலவர்

     நாதநாதன், விண்ணகரப் பெருமாள் யோக ஸ்ரீனிவாசன், மேற்கு நோக்கி
வீற்றிருந்த திருக்கோலம், ஜகந்நாதன் என்றும் சொல்வர்.

தாயார்

     செண்பகவல்லி

உற்சவர்

     ஜெகந்நாதன்

தீர்த்தம்

     நந்தி தீர்த்த புஷ்கரிணி

விமானம்

     மந்தார விமானம்

காட்சி கண்டவர்கள்

     நந்தி, சிபிச் சக்கரவர்த்தி

சிறப்புக்கள்

     1. மன்னார்குடி தொடங்கி இந்த நாதன் கோயில் முடிய உள்ள
பகுதிக்கே செண்பகாரண்யம் என்று பெயர்.

     2. விஜயரங்க சொக்கப்ப நாயக்கர் என்னும் நாயக்க மன்னர் தன்
அன்னைக்குத் தோன்றிய காரணம் காண இயலா (குணமநோய் மாதிரி)
நோயை நீக்க வேண்டி இப்பெருமானிடம் இரைந்து நிற்க, அவ்விதமே நோய்
நீங்கியதால் இக்கோவிலுக்கு பல அரிய திருப்பணிகள் செய்தார். ஒரு ராஜா
அணிய வேண்டிய சகல ஆபரண அணிகலன்களுடன் நாயக்க மன்னர்
தமது இரண்டு மனைவியருடனும், தாயுடனும் இங்கு நின்றுள்ள (சிற்பங்கள்)
கோலம் மிகவும் அழகானதாகும்.

     3. இந்த ஊர் காளமேகப் புலவரின் பிறப்பிடம். இப்பெருமான் மீது
அபாரமான பக்திகொண்டவர் இவர்.