பக்கம் எண் :

171

24. திருச்சிறுபுலியூர்

     கருமாமுகிலுருவா, கனலுருவா புனலுருவா
          பெருமாள் வரையுருவா, பிறவுருவா, நினதுருவா
     திருமாமகள் மருவும் சிறுபுலியூர்ச் சலசயனத்து
          அருமா கடலமுதே உனதடியே சரணாமே
                     - பெரிய திருமொழி 7-9-9 (1636)

     கரிய மேக உருவானவனே, நீர், நெருப்பு, மலை, மற்றும் முவ்வுலகத்து
அனைத்துருவங்களிலும், உறைபவனே, திருமகள் விரும்பி உறையும்
சிறுபுலியூர்த் தலத்துறையும் அருட்கடலாகிய அமுதமே உனது திருவடிகளே
எனக்கு அடைக்கலமென்பது திருமங்கை மன்னனின் திவ்ய கவி.

இடம்.

     இத்தலம் தஞ்சை மாவட்டத்தில் உள்ளது. மயிலாடுதுறையிலிருந்து
(மாயவரம்) நகரப்பேருந்தில் ஏறிச்சென்று கொல்லுமாங்குடி என்ற சிற்றூரில்
இறங்கி 2 மைல் நடந்து சென்றால் இத்தலத்தை அடையலாம். இந்த ஊர்
மிகச் சிறிய கிராமம் என்பதால் யாத்ரீகர்கள் தங்குவதற்கு யாதொரு
வசதியுமில்லை. எனவே மயிலாடுதுறையிலிருந்து அதிகாலையில் புறப்பட்டு
இறைவனை வழிபட்டு நண்பகலுக்குள் திரும்பிவிடலாம்.

வரலாறு.

     இத்தலத்தைப்பற்றிய வரலாறு கருட புராணத்தில் பேசப்படுகிறது.
ஒருகாலத்தில் கருடனுக்கும், ஆதிசேசனுக்கும் தம்மில் யார் பெரியவர் என்று
வாக்கு வாதம் ஏற்பட்டு இறுதியில் யுத்தத்தில் வந்து நிற்க இவர்களைச்
சாமாதானப்படுத்துவதற்காகப் பெருமாள் “ பாலசயனத்தில்” எழுந்தருளிய
ஸ்தலம் இதுவென்பது வரலாறு.

     வியக்கிரபாதர் என்னும் முனிவர் சிதம்பரத்தில் தவமியற்றி தனக்கு
மோட்சம் வேண்டுமென்று நடராஜனிடம் கேட்க, மோட்சம் கொடுக்க வல்லவர்
மகாவிஷ்ணுவே என்று நடராஜன் கூற, அவ்வாறாயின் அதற்குரிய ஸ்தலத்தை
எனக்கு காண்பியும் என்று முனிவர் வேண்ட நடராஜர் சிவலிங்க ரூபமாக
வழிகாட்ட அவரை விரைந்து பின்பற்றுவதற்கு தாம் பெற்ற வலிமையால்
விரைந்து செல்லும் புலியின் கால்களால் இத்தலத்திற்கு வந்து சேர்ந்து
முக்திபெற்றதால் இதற்குச் சிறுபுலியூர் என பெயர் வந்ததென்பர்.