இதனால் மீண்டும் சினமுற்ற முனிவர் காவிரியால் வளம் பெறும் பகுதியில் உள்ளோர் அனைவரும் துன்புற்று வறுமையுறட்டும் என்று சாபமிட, இச்சாபத்தை போக்க தேரழுந்தூரில் தேவாதிராஜனைக் குறித்து தவமிருந்து காவிரி சாபம் துடைத்தாள் என்பதும் வரலாறு. இப்பெருமானை நோக்கித் தவமிருந்த நிலையில் காவிரித் தாயாரும் இச்சந்நிதியில் இடம் பெற்றுள்ளாள். 7. தேவேந்திரன் ஒரு சமயம் கருடனை அழைத்து, ஒரு வைர முடியினையும் ஒரு விமானத்தையும் தந்து, அவைகள் எந்தப் பெருமாளுக்கு உகந்தவைகளோ அவ்வவரிடம் சேர்ப்பிக்குமாறு வேண்ட, திருநாராயண புரத்தில் உள்ள (மைசூர்) செல்லப் பிள்ளை பெருமாளுக்கு வைரமுடியினையும், இந்த தேவாதிராஜனுக்கு விமானத்தையும் அளித்தார். இதனால் இப்பெருமாள் கருடனைத்தன் பக்கத்திலேயே அமர்த்திக் கொண்டார். 8. “திருவுக்கும் திருவாகிய செல்வா” என்பது இப்பெருமானுக்குத் திருமங்கை சூட்டியுள்ள செல்லப் பெயராகும், திருமங்கையால் மட்டும் மங்களாசாசனம் செய்யப்பட்டதாகும். 45 பாசுரங்களில் பாடித்துதித்துள்ளார். இதற்கருகில் உள்ள வேறு ஒரு கோவிலும் பாடல் பெற்ற ஸ்தலமென்று கூறுகின்றனர். மணவாள முனிகளும் தேவாதி ராஜனை மங்களாசாசனம் செய்துள்ளார். |