பக்கம் எண் :

169

     “கம்பன் பிறந்தவூர், காவிரி தங்குமூர்          கும்பமுனி சாபம் குலைந்தவூர் செம்பதுமத்     தாதகத்து நாண்முகனும் தாதையும் தேடிக் காணா          ஓதகத்தார் வாழும் அழுந்தூர்”

     என்பது புலவர் புராணம் என்னும் நூலில் வரும் செய்தியாகும். இங்கு
கம்பர் மேடு என்றழைக்கப்படும் பகுதியே கம்பன் வாழ்ந்த இடமாக
கருதப்படுகிறது. இப்போது அழகான கம்பன் மண்டபம் கட்டி
முடிக்கப்பட்டுள்ளது.

     3. தமிழ் இலக்கியங்களில் தேரழுந்தூர் மிகச் சிறப்பான இடத்தைப்
பெற்றுள்ளது. முதற் கரிகாலனின் தலை நகரமாக இவ்வூர் விளங்கியது.
நீடாமங்கலத்துக்கு அருகில் உள்ள வெண்ணியென்னும் ஊரில் (வெண்ணிப்
பறந்தலை) கரிகாலன் பதினொரு குறு நில மன்னரையும், சேர,
பாண்டியரையும் ஒருங்கே முறியடிக்க அந்த ஆரவாரம் அழுந்தூரில்
கொண்டாடப்பட்ட செய்தியை புறநானூற்றின் 65,325,395 ஆம் பாடல்கள்
விளக்குகின்றன. இரண்டாம் கரிகாலன் காலத்தே இத்தலைநகர் உறையூருக்கு
மாற்றப்பட்டது. அழுந்தை, அழுந்தூர். திருவழுந்தூர், என்பன தமிழிலக்கியம்
சூட்டும் பிற பெயர்கள்.

     4. மார்க்கண்டேயன் கதை அனைவரும் அறிந்தவொன்றாகும்.
இத்தலத்துப் பெருமாளைச் சேவித்து மார்க் கண்டேயர் மோட்சம் பெற்றார்
என்பதும் ஒரு வரலாறு.

     5. பிரகலாதன் நரசிம்ம அவதாரத்தைக் கண்டு பயந்து பெருமானின்
சாந்த சொரூபத்தைக் காட்ட வேண்டுமென்று வேண்டிய போது, சினம்
அடங்கப்பட்ட சிங்கமாகப் பெருமாள் காட்சி தந்தும், பிரகலாதனின் அச்சம்
குறையாதிருக்க இத்தலத்தில் அமர்ந்துள்ள ஆமருவியப்பனாக காட்சி தந்தார்
என்பதும் ஒரு பெருஞ் சிறப்பு நிகழ்ச்சியாகும். இத்தலத்தில் பிரகலாதனும்
இடம் பெற்று நித்திய பூஜைகள் பெறுகிறான்.

     6. அகத்திய மாமுனிவர் ஒரு சமயம் காவிரித் தாயை அணுகி தன்னை
மணந்து கொள்ள விண்ணப்பிக்க, காவிரி மறுக்க, இதனால் கோபமுற்ற
அகத்தியர் காவிரியைக் குடத்திலடைக்க, ஒரு சமயம் தரையில் வைக்கப்பட்ட
அக்குடத்தைக் காகம் சாய்க்க, காவிரி வழிந்தோடியது.