பக்கம் எண் :

204

30. திருவண்புருடோத்தமம் (திருநாங்கூர்)

     இந்துவார் சடையீசனைப் பயந்த நான்
          முகனைத்தன் னெழிலாரும்
     உந்தி மாமலர் மீமிசைப் படைத்தவன்
          உகந்தினி துறை கோயில்
     குந்தி வாழையின் கொழுங்கனி நுகர்ந்துதன்
          குருளையைத் தழுவிப் போய்
     மந்தி மாம்பனை மேல் வைகு நாங்கூர்
          வண் புருடோத் தமமே - (1266)
                       பெரிய திருமொழி 4-2-9

     என்று திருமங்கையாழ்வாரால் பாடப்பட்ட இத்தலம் திருநாங்கூரிலேயே
உள்ளது.

     இங்கு எழுந்தருளியுள்ள எம்பெருமான் புருஷோத்தமன். “புருஷோத்தம
இதி வைஷ்ணவா” என்று ஸ்ரீவைஷ்ணவர்கள் எம்பெருமானை புருஷோத்தமன்
என்ற பெயரில் அழைப்பார்கள். இவனைப் பற்றிக் கூறும் வித்தைக்கு
“புருஷோத்தம வித்னய” என்று பெயர்.

     தமிழ்நாட்டில் உள்ள திவ்ய தேசங்களில் புருஷோத்தமன் என்ற
பெயரில் எம்பெருமான் எழுந்தருளியிருப்பது இங்கு மட்டுந்தான்.
புருஷோத்தமனைத் தான் தூய தமிழில் புருடோத்தமன் என்கிறார் மங்கை
மன்னன்.

     குழந்தைக்கு வரும் துன்பத்தை தாய்தந்தை போக்குவர். தம்மிடம்
தோன்றிய பிரம்மா முதலான தேவாதி தேவர்கட்கு உண்டாகும் துன்பத்தைப்
போக்கி தம்மை எதிர்ப்பவர்களை அழித்து உலகத்தை ரட்சிக்கும்
புருடோத்தமன் இவனே. (பக்தர்களும், முக்தர்களும், நித்யர்களுமாகிய
புருஷர்கள் யாவரினுஞ் சிறந்தவனென்னும் பொருள்படும்) குறைவில்லா
ரட்சிப்புத் தன்மைகொண்டு வள்ளல்போல் தன் அருளை வாரி வழங்குதலால்
(வள்ளல் தன்மையை உயர்வு படுத்திக் காட்ட) வண் புருடோத்தமன் ஆனான்.
இந்த சம்பந்தத்தால் இத்தலம் வண் புருடோத்தம மாயிற்று.