மங்களாசாசனம் செய்யும் காட்சி தை அமாவாசைக்கு மறுநாள் இங்கு நடப்பது கண்கொள்ளாக் காட்சியாகும். திருமங்கையாழ்வார் ஒவ்வொரு பெருமாளாக மங்களாசாசனம் செய்துவரும்போது அப்பெருமாளுக்கு உரிய பாசுரங்களை பக்தர்களுடன் சேர்ந்து பாடல் வல்லார் சேவிப்பது செவிக்கினிய விருந்தாகும். 4) திருக்கோட்டியூர் நம்பி இங்கு விஜயம் செய்துள்ளார். திருமந்திரத்தை உபதேசித்த பத்ரி நாராயணன் இருக்கும் இடமல்லவா இது. திருமந்திரத்தை இராமானுஜருக்கு உபதேசித்த திருக்கோட்டியூர்நம்பி இங்கு எழுந்தருளியிருப்பது முறைதானே. 5) மிகச்சிறந்த வடிவமைப்புடன் பெரிய அளவில் கட்டப்பட்டுள்ள இக்கோவில் மாடக்கோவில் என்று சொல்லுமாற்றான் சிறந்து விளங்குகிறது. 6) திருமங்கையாழ்வாரால் மட்டும் 12 பாசுரங்களில் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது. 7) சீதளமான பூமியோடு, இயற்கையெழில் கொஞ்ச செந்நெல்வயல்கள் சூழ, நிறைந்த பொழில்களில் மந்தாரம் நின்றிலங்க மிகவும் ரம்மியமாகத் திகழும் இப்பகுதியில் (திருநாங்கூர் பகுதி) இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள பறவைகளின் வருகையும் வாழ்வும் திருமங்கையாழ்வாரின் பாசுரங்களில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. 8) பழனம் என்று சொல்லத்தக்க அளவில் அமைந்துள்ள இப்பகுதியில் பைங்காற் கொக்கும், செங்கால் அன்னமும், குயிலும், மயிலும், கிளியும், புறாவும் தம் துணையோடு பறந்து ஒன்றித் திளைத்து விளையாடி மகிழும் காட்சிகள் திருமங்கையாழ்வாரின் பாடல்களிலும் பயின்று வந்துள்ளன. |