பக்கம் எண் :

261

இதுதான் என்று பாத்ம புராணத்தில் எட்டு அத்தியாயங்களில் (பிரம்மன்
கூறியதாக) இத்தல வரலாறு பேசப்படுகிறது.

     முன்னொரு காலத்தில் மகாபலி என்னும் மன்னன் ஒருவன் தர்ம
நியாயங்கட்கு கட்டுப்பட்டு ஆட்சி புரிந்து வந்தான். இருப்பினும் இம்மன்னன்
தேவர்களைத் துன்புறுத்தி அவர்கட்குத் தொடர்ந்து இன்னல்கள்
விழைத்துவந்தான். அசுரர்களின் குருவான சுக்கிர பகவான் இம்மன்னனுக்கு
குருவாக இருந்து இம்மன்னனுக்கு சர்வ சக்திகளையும் அளித்து தேவர்களைத்
துன்புறுத்தவும் தூண்டிவந்தான்.

     இந்தக் காலகட்டத்தில் புத்திரப் பேறில்லாத ரிஷி தம்பதியரான கசியபர்,
அதிதி ஆகிய இருவரும் திருமால் குறித்து புத்திர காமேஷ்டியாகம் செய்து
வந்தனர்.

     இந்நிலையில் மகாபலியின் துன்பம் பொறுக்க இயலாத தேவர்கள்,
திருமாலைத் துதித்து தம்மைக் காத்தருள வேண்டுமென விண்ணப்பிக்க, புத்திரப்பேறு வேண்டி மகாயாகம் செய்து கொண்டிருக்கும் கஸியபர் அதிதி தம்பதிகட்குப் புத்திரனாக அவதாரமெடுத்து மகாபலியை ஒழித்து உங்கள் இன்னல்களைப் போக்குகிறேன் என்று நல்லருள் புரிந்தார்.

     ரிஷி தம்பதிகளின் யாகத்தை மெச்சிய விஷ்ணு அவர்கட்கு மகவாக
அவதரித்து குட்டையான வடிவம் கொண்டவாமன மூர்த்தியாக வளர்ந்து
பிரம்மச்சர்யத்தை மேற்கொண்டார்.

     பிரம்மச்சர்யம் மேற்கொண்டதும் பூமிதானம் பெறுவதற்காக மாபலிச்
சக்ரவர்த்தியிடம் வந்தார். குட்டையான வாமன ரூபத்தைக் கண்டு வியந்த
மாவலி ஏளனங்கலந்த புன்னகையுடன் என்ன வேண்டுமென்று கேட்க எனக்கு
மூன்றடி மண் வேண்டுமென வாமனன் கேட்க, இதென்ன பிரமாதம்
இப்போதே தந்தேன் என்று வாக்களித்து தாரை வார்த்து தானம் கொடுக்க
ஆயத்தமானான்.

     வந்திருப்பது ஸ்ரீமந் நாராயணன் என்றும், தனது சீடன் வீணாக
வீழ்ந்துவிடப் போகிறான் என்பதை உணர்ந்த சுக்ராச்சார்யார் மாவலியிடம்
உண்மை உணர்த்தி தானம் கொடுப்பதை நிறுத்தச் சொன்னார்.

     கொடுத்த வாக்கை மீறாத குணம் படைத்த மாவலிதான் தானம்
கொடுத்தே தீருவேன் என்றும் அவ்வாறு வந்திருப்பது ஸ்ரீமந் நாராயணனே
எனில் அவருக்குத் தானம் கொடுப்பதும் தமக்குப் பெருமைதான் எனக் கூறி
தாரை வார்க்கத் தொடங்கினான்.