இந்நிலையிலும் இதைத் தடுக்க நினைத்த சுக்ராச்சாரியார் ஒரு சிறிய வண்டின் வடிவமாக உருவெடுத்து தாரை வார்த்துக் கொடுக்கும் கமண்டலத்தின் துவாரத்தை அடைத்துக் கொண்டார். கமண்டல துவாரத்தை ஏதோ அடைப்பதையறிந்த வாமனன் ஒரு சிறிய நாணல் புல்லினையெடுத்து துவாரத்தின் வழியாகக் குத்த சுக்ராச்சாரியார் ஒரு கண்ணை இழந்தார். (இழந்த கண்ணை மீண்டும் பெறவும், செய்த பிழையின் பாவம் போக்கவுந்தான் சுக்கிரன் திருவெள்ளியங்குடியில் திருமாலைக் குறித்து தவமிருந்து தனது கண்ணை மீண்டும் பெற்றார் என்பது திருவெள்ளியங்குடி ஸ்தல வரலாறு ஆகும்) மாவலி தாரை வார்த்துக் கொடுக்க தனது ஓரடியால் இந்த நிலவுலகு முழுவதையும் அளந்து மற்றோரடியை விண்ணுயரத் தூக்கி விண்ணுலகம் முழுவதும் அளந்து, திருவிக்ரம அவதார கோலத்தில் நின்று தனது மூன்றாவது அடிக்கு இடம் எங்கே என்று கேட்டு நின்றார். வாமன வடிவத்தில் வந்தவர் நெடிதுயர்ந்த திருவிக்ரம அவதாரங்காட்டி நிற்பதைக்கண்ட மாவலி மனம் பதைத்து, தன் நிலையுணர்ந்து மன்னிப்பு வேண்டி தங்களது மூன்றாவது திருவடிக்கு எனது சிரசே இடம் என்று சரணாகதி அடைந்தார். தமது திருவடியை மாவலியின் சிரசில் வைத்த மாத்திரத்தில் பாதாள உலகஞ்சென்று சேர்ந்தான் மாவலி. தேவர்கள் பூமாரி பொழிய, பக்தர்களும், ஞானிகளும் ஆனந்த பஜனம் பண்ண, விண்ணுலகை நோக்கிய திருவடி பிரம்மனின் சத்திய லோகம் வரை செல்ல இதைக் கண்ட பிரம்மன் அரிதான எம்பெருமானின் திருவடி பாக்கியம் தனக்கு கிட்டியதை எண்ணி கமண்டல நீரால் பாத பூஜை செய்ய அதனின்றும் தெறித்த நீர்த்துளிகளே கங்கையாகப் பெருகியதென்பர். இவ்விதம் ஒரே நேரத்தில் வாமன, திருவிக்ரம அவதாரம் எடுத்த திருக்கோலக் காட்சியைக் கேள்விப்பட்ட மிருகண்டு என்னும் முனிவர் தாமும் இவ்விரு திருக்கோலங்களையும் ஒரு சேரக் காண வேண்டுமென்று எம்பெருமானைக் குறித்து தவமிருந்ததாக ஐதீஹம். அன்ன பானமின்றி கடும் விரதம் மேற்கொண்ட இம்முனிவரின் தவத்தை மெச்சிய பிரம்மன் நீர்வாமன, திருவிக்ரம திருக்கோலத்தைக் காண வேண்டுமாயின் கிருஷ்ண பத்திரா நதிக்கரையில் கிருஷ்ண ஷேத்திரத்தில், கிருஷ்ணன் என்ற பெயரில் பகவான் கோயில் கொண்டுள்ள இடமே நீர் தவம் செய்வதற்கு உகந்த இடமாகும். எனவே அங்கு சென்று கடுந்தவம் புரிவதுடன் ஏழையெளியவர்கட்கும் வரையாது அன்னதானம் செய்ய வேண்டுமெனக் கூறினார். |