அதன்படி மிருகண்டு முனிவர் தமது துணைவியார் மித்ராவதியுடன் தென்புலத்துக் கிருஷ்ண ஷேத்திரத்தை அடைந்தார். பன்னெடுங்காலம் இவ்விதமே அன்னதானம் செய்து கடுந்தவமியற்றி வருங்காலை ஓர் நாள் மஹாவிஷ்ணு ஒருவயோதிக பிராம்மணர் ரூபத்தில் வந்து அன்னம் கேட்க, அப்போது தானம் செய்யக்கூட அன்னம் இல்லாத நிலைமையிருக்க தனது மனைவி மித்ராவதியை அணுகிய மிருகண்டு முனிவர் வந்திருக்கும் வேதியர்க்கு உடனடியாக அன்னம் படைக்க ஏதாவது செய்ய வேண்டுமென, கற்பிற் சிறந்த அப்பெண்மணி நாராயணனை நினைத்துப் பாத்திரத்தைக் கையிலெடுத்த மாத்திரத்தில் அதில் அன்னம் நிரம்பி வழிந்தது. அதைப் பெற்றுக் கொண்டு பெருமகிழ்வோடு முனிவர் வெளியே வர பகவான் சங்கு சக்ரதாரியாக காட்சி தந்தார். வீழ்ந்து பணிந்த மிருகண்டு முனிவர் வாமன-திருவிக்ரம அவதாரத்தைத் தமக்கு காட்டியருள வேண்டுமென அவ்வண்ணமே திருமால் அருள் பாலித்த திருத்தலம் இத்திருக்கோவலூராகும். மூலவர் திரு விக்ரமன் - ஒரு காலைத் தரையில் ஊன்றி ஒரு காலை விண்ணை நோக்கித் தூக்கிய நிலை. கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம். இப்பெருமான் விராட் புருஷனாக இடது கையில் சக்கரம், வலது கையில் சங்கும் கொண்டு நீருண்ட மேகம் போன்ற திருமேனியுடன் மார்பில் ஸ்ரீவத்ஸம், கண்டத்தில் கௌஸ்துபம், காதுகளில் மஹாகுண்டலம், வைஜயந்தி வனமாலையுடன் தேஜோமயமாய் ஒளிரும் புன்னகையுடன் சுற்றியும் பிரகலாதன், மகாபலி, சுக்ராச்சார்யார், தேவர்கள், யட்சர்கள், சித்தர்கள், கருட வில்வக்ஸேநர் புடை சூழ ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் எழுந்தருளியிருக்கிறார். தாயார் பூங்கோவல் நாச்சியார், புஷ்பவல்லி தாயார் என்னும் திருநாமங்கள். உற்சவர் ஆயன், ஆயனார், கோவலன் (கோபாலன்) தாயார் கஜலெட்சுமி தீர்த்தம் பெண்னையாறு, கிருஷ்ண தீர்த்தம், சுக்ர தீர்த்தம். |