காஞ்சிதான். ‘நகரேஷு காஞ்சி’ என்பர். புண்ணிய நகரங்களில் இதுவும் ஒன்றாகும். ‘அயோத்யா மதுரா மாயா காஸி காஞ்சி அவந்திகா புரி த்வராவதிசைவசப்த ஏகா மோசஷதாயகா’ | இந்த 7 நகரங்களில் வசிப்பவர்கட்கும், இங்குள்ள எம்பெருமானைத் தரிசிப்பவர்கட்கும் முக்தி உண்டாகுமெனப் புராணங்கள் கூறுகின்றன. பூமாதேவி இடுப்பில் அணியும் ஒட்டியாணம் போன்ற பகுதியாக இந்நகரம் திகழ்வதால் காஞ்சியெனப் பெயர் வந்ததாய்க் கூறுவர். இடையில் அணியக்கூடிய அணிகலனுக்கு காஞ்சி என்ற பெயரும் இருந்தது. வயல்கள் நிறைந்த நாடென்றும், சான்றோர் நிறைந்த நாடென்றும் ஒளவையாரால் போற்றப்பட்ட இந்த தொண்டை நாட்டுக்கு காஞ்சி பிரதானமான தலைநகரமாகத் திகழ்ந்தது. ‘தெண்ணீர் வயற்றொண்டை நன்னாடு சான்றோருடைத்து’ - என்பது ஒளவையார் வாக்கு. பண்டை இந்தியாவிலும் சரி, இன்றைய தமிழ்நாட்டிலும் சரி இந்தக் காஞ்சி ஒரு புண்ணிய பூமி. அறிஞர் பெருமக்களும், ஆய்வாளர்களும், ஞானிகளும், சமயவல்லுநர்களும், கலைத்திறன் மிக்கோரும் மண்டிக்கிடந்து புகழ் சேர்த்த பூமியாகும். இன்றும் இது தொடர்கதையாகக் கொண்டிருக்கிறது. இன்னிசைக் கருவிகளில் இசையுடன் ஆடல் பாடலுடன் சேர்ந்து எந்நேரமும் கலையழகு பொருந்த திகழ்ந்தது இக்காஞ்சி மாநகர் என்று திருஞான சம்பந்தர் கூறுகிறார். முழவம் மொந்தை குழல்யாழ் ஒலி சீராலே பாடல் ஆடல் சிதைவில்லாதோர் ஏரார் பூங்காஞ்சி - (என்பர் ஞானசம்பந்தர்) | இந்நகர் (இந்த ஊர்) ஒரு சக்ரவடிவில் அமைந்துள்ளது. ஸ்ரீசக்கரத்தில் நவாவரண தேவதைகள் என்னும் சக்திக் கணங்கள் எப்படி நிறைந்திருக்கின்றனவோ அப்படி காஞ்சியில் அனைத்து தேவதைகளும் நிறைந்திருக்கின்றனர். தொண்டை மண்டலத்தின் திலகமான இந்தக் காஞ்சியில் தொண்டை மண்டலத்து 22 திவ்ய தேசங்களில் 14 திவ்ய தேசங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இந்தப் பெருமை இந்தியாவில் வேறெந்த நகரத்திற்குமில்லை. திவ்யம் கொட்டிக்கிடக்கும் நகரமாகும் இது. எம்பெருமானின் ஸாமீப்யம் இந்த ஊருக்கு மிகவும் சுலபம். |