ஆறோடு ஈரெட்டு தொண்டை எனப்பட்ட 22 தொண்டை நாட்டுத் திவ்ய தேசங்கள் எவையெனக் காண்போமாயின். அந்தமா மத்தியூர் அட்டபுயக் கரம் விந்தை தன்கா வேளுக்கை பாடகம் நீரகம் புனித நிலாத்திங் கட்த்துண்டம் ஊரகம் வெஃகா வுடனே காரகம் வந்துலாவுங் கார்வானங் கள்வனூர் பந்த மகற்றிடும் பவள வண்ணமே தொன்மை யாம்பர மேச்சுர விண்ணகரம் நின்மலப் புட்குழி நின்றவூ ரெவ்வுள்ளூர். நீர்மலை இடவெந்தை நீர்க்கடன் மல்லை சீர்மிகு மல்லிக்கேணி சிறந்ததாங் கடிகை எண்டிசை புகழுமிவ் விருபத்தி யிரண்டு தொண்டை நாட்டுப் பதி தொழுது போற்றுவோம். | இந்த 22 இல் காஞ்சி மாநகரில் மட்டும் 14 திவ்ய தேசங்கள் உள்ளன. பெரிய காஞ்சியில் உள்ள திவ்ய தேசங்கள் 1. திருப்பாடகம் 2. திருநிலாத்திங்கள் துண்டம் 3. திரு ஊரகம் 4. திரு நீரகம் 5. திருக்காரகம் 6. திருக்கார்வானம் 7. திருக்கள்வனூர் 8. திருப்பவளவண்ணம் 9. திருப்பரமேச்சுர விண்ணகரம். சின்னக் காஞ்சி எனப்படும் சிறிய காஞ்சியில் உள்ள திவ்ய தேசங்கள் 1. திருக்கச்சி 2. திருஅட்டபுயக்கரம் 3. திருத்தண்கா 4. திருவேளுக்கை 5. திருவெஃகா மீதியுள்ள 8 திவ்ய தேசங்களை எடுத்துக் கொண்டால் அவைகள் மிகச் சிறப்பான வரலாற்றுச் சிறப்பும், வைணவம் உயர்ந்தோங்கிய நகரங்களிலும் அமைந்து தொண்டை மண்டல திவ்ய தேசங்கட்கு அரண்போல் விளங்குகின்றன. திருவல்லிக்கேணியை எடுத்துக் கொண்டால் மாநிலத்தின் தலைநகரிலேயே அமைந்து அழகு சேர்க்கிறது. |