பக்கம் எண் :

28

சித்திரகூடத்தான், உலகளந்த தாடாளன், யானைக்கு அருளிய கவித்தலத்தான்,
ஜடாயு மோட்சம் நல்கிய ராமன், ஆமருவி நின்ற கோபாலன், வைணவ
லட்சிணை பொறிக்க முன்நின்று நிற்கும் நாராயணன், என்று இத்தன்மையான
பெருஞ்சக்தி படைத்த பெருமான்களோடு நிற்பதோடன்றி, இதற்கெல்லாம்
திலகமிட்டாற்போல் திவ்யம் மிளிரும் “திருநாங்கூர்ப்பதிகள்” என்று
சொல்லப்பட்ட ஒன்றுக்கொன்று மருங்கமைத்த 11 திருப்பதிகளையும்
தன்னகத்தே கொண்டது.

     இங்கு எழுந்தருளியுள்ள பெருமான்களோ இயற்கையோடிணைந்து எழில்
கொஞ்ச வீற்றிருப்பவர்கள். எங்கு நோக்கினும் பசுமையான வயல்கள் சூழ
இளந்தென்றல் வீச, பறவையினங்கள் கானம்பாட பக்தர்கள் பண்ணிசைக்க
பரம பவித்ரமாக வீற்றிருப்பவர்கள்.

     பாண்டிநாட்டு 4 ஆழ்வார்களால் செய்ய முடியாததை, அதாவது வாள்
வலியால் மந்திரத்தைத் தட்டிப் பறிக்க வந்த மங்கை மன்னனுக்கு
மணவாளனாக காட்சி கொடுத்து திருமந்திரம் உபதேசம் விளைந்த பதியும்
இங்கு காணலாம்.

     (திருமங்கை, தொண்டரடிப்பொடி, திருப்பாணன் ஆகிய முப்பெரும்
ஆழ்வார்களை ஈன்ற நாட்டில் அடங்கிய பகுதி) இத்தகைய
சிறப்பியல்புகளுடன் சிறப்புகட்கெல்லாம் சிகரம் வைத்ததுபோல் 108 இல்
பெரும்பான்மையான 40 திவ்ய தேசங்களைத் தன்னகத்தே கொண்டு
திகழ்கிறது.

     இந்தச் சோழநாடு என்பது எங்குள்ளது? இன்றைய மாவட்டப்
பிரிவினைகளில் புத்தம்புது பெயர் சூடித் திகழும் மாவட்டங்களைக் கொண்ட
நம் தமிழகத்தே சோழநாடு, பாண்டி நாடு என்று இந்த நாடுகளை
அடையாளங்கண்டு கொள்வதென்பது எங்ஙனம்? எது சோழநாடு, இதன்
எல்லைகள் எங்கிருந்து துவக்கம், ஈரிருபதாஞ் சோழம் என்றனரே அந்தச்
சோழநாடு எங்கே என்று கேட்கும் அவலம் ஒரு காலத்தில் வந்துவிடும்
என்று எண்ணித்தானோ என்னவோ நம் முன்னவர்கள் சோழநாட்டிற்கு
எல்லைச் சொல்லிச் சென்றுள்ளனர்.
 

     கடல் கிழக்கு தெற்கு கரை பொரு வெள்ளாறு
          குடதிசையிற் கோட்டைக்கரையாம் - வடதிசையி
     வோனாட்டு பண்ணை இருபது நாற்கதஞ்
          சோனாட்டுக்கு எல்லையெனச் செப்பு
                                   - பெருங்கதை