பக்கம் எண் :

29

     இப்பேர்ப்பட்ட சோழநாட்டில் 40 திவ்ய தேசங்கள் எங்குள்ளது.
இதனையும் பின்வரும் பாடல் மூலம் நம்முன்னோர்கள் காட்டிப்
போயுள்ளனர்.

     உயர் திருவரங்கம் உறையூர் தஞ்சை
          அயர் வகற்றிடும் அன்பில் கரம்பனூர்
     புகழ் வெள்ளறை புள்ளம் பூதங்குடி
          அந்தமில் பேர்நகர் ஆதனூர் அழுந்தூர்
     போதமருட் சிறுபுலியூர்ச் சேறை
          மாதலைச்சங்க நான்மதியங் குடந்தை
     விரவு கண்டியூர் விண்ணகர் கண்ண
          புரமுடனாலி பொன்னாகை நறையூர்
     நத்துநந்தி புரவிண்ணகர மிந்தளுர் திருச்
          சித்திரகூடஞ் சீராம விண்ணகரம்
     கூடலூர் கண்ணங்குடி கண்ணமங்கை
          வீடருள் கவித்தலம் வெள்ளியங்குடி
     வண்ண மணி மாடக்கோவில் வைகுந்த
          விண்ணகரம் மரிமேய விண்ணகரம்
     திருத்தேவ னார்த்தொகை சிறந்த தாயவண்
          புருடோத்தமஞ் செம்பொன் செய்கோயிலே
     பாவனத் தெற்றியம்பலம் பல மணிக்கூடங்
          காவளம் பாடிக் கவின் வெள்ளக்குளம்
          துதி பார்த்தன் பள்ளிசேர், சோழநாட்டுப்
     பதியதோர் நாற்பதும் பணிந்து போற்றுவோம்.

     சோழநாட்டைக் கண்டோம். அந்நாட்டில் உள்ள 40 திவ்ய
தேசங்கண்டோம். அங்குள்ள பெருமாள்கள் யார்? ஏன் அவ்விடம் வந்தனர்?
யாருக்கருளினர், இவர்களின் பொருட்டான ஆழ்வார்களின் அருளிச்
செயல்யாது? நெஞ்சையள்ளும் செந்தமிழ் கூறும் பிற செய்திகள் என்ன?
விமானத்தின் பெயர் எத்தகையது, கல்வெட்டுக்கள் யாது கூறுகிறது? கர்ண
பரம்பரைச் செய்திகள் உண்டா, நாடாண்ட மன்னர்கள் இத்திருத் தலங்களுக்கு
கைங்கர்யங்கள் ஆற்றியுள்ளனரா, என்பவற்றைக் காண வேண்டாமா?

     ஆம் கண்ணாரக் கண்டு, நெஞ்சார சுவைத்து வாயாரப் பாடவேண்டும்,
வாரீர் செல்வோம்.