பக்கம் எண் :

30

1. திருவரங்கம் என்னும் ஸ்ரீரங்கம்

     இரும்பனன் றுண்ட நீரும்
          போதருங் கொள்க, என்றன்
     அரும்பிணி பாவ மெல்லாம்
          அகன்றன என்னை விட்டு
     சுரும்பமர் சோலை சூழ்ந்த
          அரங்கமா கோயில் கொண்ட
     கரும்பினைக் கண்டு கொண்டென்
          கண்ணினை களிக்கு மாறே
                     -திருக்குறுந்தாண்டகம் 13.

     எந்நேரமும் வண்டுகள் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும் அழகிய
சோலைகள் சூழ்ந்த அரங்கத்தில் பள்ளிகொண்ட கரும்பாகிய என்
அரங்கனைக் கண்ட மாத்திரத்தில், சூடான இரும்பில் பட்ட நீர் எவ்வாறு
வேகமாக உட்கவரப்பட்டு காணாமல் போகிறதோ அதுபோல், என்
பாவமெல்லாம் என்னைவிட்டு பறந்தோடிவிட்டது என்று
திருமங்கையாழ்வாரால் பாடிப் பரவசித்து மங்களாசாசனம் செய்யப்பட்ட
இத்தலம் இன்றைய இந்தியாவிலேயே மிகச் சிறப்பான தலமாகும். ஸ்ரீரங்கம்
ரயில்வே நிலையத்திலிருந்து சுமார் ஒரு கி.மீட்டருக்குக் குறைவான தூரமே,
திருச்சி பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 10 கி.மீ.தூரமாகும்.

     மிகப் புகழ்பெற்ற இத்தலம் இன்னும் சில ஆண்டுகளில் திருப்பதிக்குச்
சமமானதாய்த் திகழப்போகிறது.

     திருமாலின் திவ்ய தேசங்கள் 108ல் இத்திருவரங்கம் தலையாயது
சோழநாட்டுத் திருப்பதிகளுள் முதன்மையானது. கோயில், திருமலை,
பெருமாள் கோயில் என்று பிரதானமாகச் சொல்லப்பட்ட மூன்றினுள்
முதன்மையானது. அதாவது கோயில் என்றால் ஸ்ரீரங்கம். திருமலை என்றால்
திருப்பதி. பெருமாள் கோயில் என்றால் காஞ்சி வரதராஜப் பெருமாள்
சன்னதி.

     பெரிய கோயில் என்றும், பூலோக வைகுண்டம் என்றும் போக
மண்டபம் என்றும் போற்றப்படும் இத்தலத்தை, அண்டர் கோன் அமரும்
அணியரங்கமென்றும், தென்திருவரங்கமென்றும், செழுநீர்த்
திருவரங்கமென்றும் திட்கொடிமதில் சூழ்த் திருவரங்கமென்றும் ஆழ்வார்கள்
மாந்தி மகிழ்வர்.