பக்கம் எண் :

31

     பரமபதம், திருப்பாற்கடல், சூரிய மண்டலம், யோகிகளுடைய
உள்ளக்கமலம், இவையனைத்தும் இனியவை எனக்கருதி எம்பெருமான் ஸ்ரீ
மந் நாராயணன் தானே மனமுவந்து இங்கு வந்து தங்கி, தேனும் பாலும்,
கன்னலும், நெய்யும் அமுதும் கலந்தாற்போன்று மறைந்து உறைகின்றான்.
இங்கெல்லாம் மறைந்துறைகின்ற எம்பெருமான், இப்பூவுலகில் மாந்தரெல்லாம்
தன்னைக் கண்ணாரக்கண்டு, தன் பேரழகை அள்ளிப்பருகிக் களிப்பெய்த
தானே ஒரு அரங்கத்தைத் தெரிவு செய்து பள்ளிகொண்ட இடம்தான்
ஸ்ரீரங்கம்.

     எம்பெருமானின் பள்ளிகொண்ட திருக்கோலத்தையே பெயராகத் தாங்கி
ஸ்ரீரங்கநாதன் பள்ளியென்றே அழைக்கப்பட்ட இவ்விடம், தமிழில் திருச்சீரங்க
நாதன் பள்ளியாகி அவ்விதமே அழைக்கப்பட்டு காலப்போக்கில்
திருச்சிராப்பள்ளியாகி தற்போது திருச்சியாயிற்று.

வரலாறு

     இத்தலம் பற்றி எண்ணற்ற புராணங்களும், வடமொழி நூற்களும்
பண்டைத் தமிழ் இலக்கியங்களும் விவரங்களை வாரியிறைக்கிறது.

     இங்கு பள்ளி கொண்டுள்ள பெருமாள் சத்தியலோகம் எனப்படும்
பிரம்மலோகத்தில் பிரம்மதேவனால் தினமும் பூஜிக்கப்பட்ட திருவாராதனப்
பெருமாள் ஆவார்.

     இப்பூவுலகில் சூரிய குலத்தில் வந்த மனு குமாரரான இட்சுவாகு
என்னும் மன்னன் பிரம்மனைக் குறித்து கடுந்தவமியற்றினான். இவன் தவத்தை
மெச்சிய பிரம்மன் இவனுக்கெதிரில் தோன்றி வேண்டிய வரம் கேள் என்றான்.
அதற்கு இட்சுவாகு, பிரம்மனே, உம்மால் தினந்தோறும் பூஜிக்கப்படும்
திருமாலின் திருவாராதன விக்ரகமே எனக்கு வேண்டுமென்று கேட்க
பிரம்மனும் மறுப்பின்றி வழங்கினான். அப்பெருமானை அயோத்திக்கு
கொணர்ந்த இட்சுவாகு பூஜைகள் நடத்தி வந்தான். திருப்பாற்கடலில்
பள்ளிகொண்ட வண்ணத்தில் உள்ள இப்பெருமானே இட்சுவாகு மன்னன்
முதல் இராம பிரான் வரையில் உள்ள சூரிய குலமன்னரெல்லாம் வழிபட்டு
வந்த குலதெய்வமாயினான்.

     இட்சுவாகு மன்னனால் விண்ணுலகில் இருந்து இங்கு கொண்டுவரப்
பட்டு அவன் குலத்தோர்களால் பூஜிக்கப்பட்டு பின்பு எல்லோருக்கும்
உரியவனான். இப்பெருமாள் இட்சுவாகுவால் கொணரப்பட்டதால் இப்பெருமாள்
இட்சுவாகு குலதனம் என்றே அழைக்கப்பட்டார்.