பக்கம் எண் :

32

     திரேதா யுகத்தில் இராமாவதாரம் மேற்கொண்ட திருமால்
இராவணனையழித்து, அயோத்தியில் பட்டம் சூட்டிக் கொண்டார்.
இலங்கையிலிருந்து தன்னுடன் போந்த வீடணனுக்கு விடைகொடுத்து
அனுப்பும்போது, தன் முன்னோர்களால் பிரம்மனிடமிருந்து கொணரப்பட்ட
இந்த திருவாராதனப் பெருமாளை வீடணனுக்கு (விபீஷணனுக்கு) சீதனமாக
கொடுத்தார். வீடணன் இப்பெருமாளைப் பெற்றுத் திரும்பியதை வால்மீகி
தமது இராமாயணத்தில்

     விபிஷனோபி தர்மாத்மா ஸஹ தைர் நைர்ருதைர்ஷபை
     லப்தவா குலதனம் ராஜா லங்காம் ப்ராயாந்த மஹாயா

     என்று கூறுகிறார்.

     (வால்மீகி இராமாயணம் யுத்த காண்டம் 128 வது ஸர்க்கம்,
     87 வது சுலோகம்.)

     மிக்க பயபக்தியுடன் ப்ரணா வாக்ருதி என்ற விமானத்துடன்
அப்பெருமானை எழுந்தருளச் செய்து இலங்கைக்கு வீடணன்
கொண்டுவருங்காலை, வண்டினம் முரல, குயில் கூவ, மயிலினம் ஆட,
செழுநீர் சூழ தன் சிந்தைக்கு இனிய அரங்கமாகத் தோன்றின, இந்த காவிரி,
கொள்ளிட நதிகட்கிடையில் பள்ளி கொள்ள விரும்பிய திருமால் வீடணனுக்கு
சற்றுக் களைப்பையும் அசதியையும் உண்டு பண்ண வீடணன் இப்பெருமாளை
இவ்விருநதிக்கிடைப்பட்ட இவ்விடத்தில் சற்றே கிடாத்தினான்.

     அம்மட்டே தன் உள்ளங்கவர்ந்த இடமாதலால் அசைக்க இயலா
அளவிற்கு வீடணன் செல்ல வேண்டிய தென்றிசை நோக்கி இன்றுள்ள
வடிவில் பள்ளி கொண்டார்.

     வீடணனோ விழுந்தான், தொழுதான், அழுதான், அலற்றினான்.
ஆற்றொன்னாமையால் அலமந்தான். இப்பகுதியை ஆண்டுவந்த
சோழமன்னன் தர்ம வர்மன், என்பவன் இந்நிகழ்ச்சியை அறிந்து ஓடிவந்து
பெருமாளையும் தொழுதுவிட்டு வீடணனுக்கு ஆறுதல் கூறினான்.

     பித்துப் பிடித்த நிலையில் சின்னாட்கள் இங்கு தங்கியிருந்த
வீடணணின் கனவில் வந்த எம்பெருமான் தான் இவ்விடத்தே பள்ளிகொள்ளத்
திருவுள்ளம் பற்றியதை தெரிவித்து, நீ செல்லக்கூடிய பாதையை நோக்கியே
நான் பள்ளி கொண்டுள்ளேன். கவலை வேண்டாம் என்று கூறி,
ஆண்டுக்கொருமுறை வந்து தன்னை வழிபட்டுச் செல்லுமாறும் அருளினார்.