பக்கம் எண் :

284

     22) வைணவத்திற்கு அளவிலடங்காத் தொண்டு செய்த வைணவப்
பெருந்தகை மாமேதை, பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார்
சுவாமிகள் இங்கிருந்து ஆற்றிய தொண்டு அளவிடற்கரியது.

     23) இத்தலத்தின் கிழக்கு வாசலுக்கு எதிரில் செல்லும் வீதியில்
இராமானுஜர் தமது இளமைக்காலத்தைச் செலவிட்ட திருமாளிகை இன்றும்
உள்ளது. இதற்கு உடையவர் திருமாளிகை என்று பெயர். தேவப்பெருமாள்
இவ்வழியில் எழுந்தருளும் நாட்களில் இங்கு மண்டகப்படி உண்டு.

     24) எம்பெருமான் இங்கு புண்யகோடி விமானத்துடன் எழுந்தருளியதால்
இங்கு செய்யப்படும் ஒரு புண்ணியமானது கோடியாக விருத்தியடைகிறது
என்பது ஐதீஹம்.

     25) பாரதம் பாடிய பெருந்தேவனார் சங்ககாலப் புலவர், சங்க
காலத்திலேயே இத்தலம் சிறப்புற்றிருந்ததை,
 

     ‘தேனோங்கு நீழற் திருவேங்கட மென்னும்
          வானோங்கு சோலை மலையென்றும்-தானோங்குந்
     தென்னரங்க மென்றுந் திருவத்தியூர் என்றுஞ்
          சொன்னார்க்கு உண்டோ துயர்’

     26) நூற்றெட்டுத் திருப்பதியந்தாதியில்

     பொருளாசை மண்ணாசை பூங்குழலார் போகத்
     திருளாசை சிந்தித்திராதே - அருளாளன்
     கச்சித் திருப்பதியாம் அத்தியூர்க் கண்ணன்தாள்
     இச்சித் திருப்பதி யாமென்று

     என்கிறார் பிள்ளைப் பெருமாளையங்கார்.