| 17) பூ மண்டபம், போக மண்டபம், தியாக மண்டபம் என்று மூன்று திவ்ய தேசங்கள் வர்ணிக்கப்படுகின்றன. பூ மண்டபம் என்பது திருவேங்கடம் ‘சிந்து பூ மகிழ் திருவேங்கடம்’ என்பது நம்மாழ்வார் திருவாக்கு. போக மண்டபம் என்பது திருவரங்கம். எம்பெருமான் திருவரங்கத்தில் பக்தர்கட்கு போக்யமாய் இருப்பதாலும், சயன திருக்கோலத்தில் ஒரு வகையான போக மண்டபம் ஆயிற்று ஸ்ரீரங்கம். தியாக மண்டபம் எனப்படுவது இத்தலமாகும். தனக்கே திருமஞ்சன தீர்த்தம் கொணரும் கைங்கர்யத்தை மேற்கொண்டிருந்த இராமானுஜரை ஸ்ரீரங்கத்திற்கு ஆளவந்தார்க்கு அடுத்தபடியாக வைணவத் தலைமையேற்க தியாகம் செய்து அனுப்பி வைத்ததால் இத்தலத்திற்கு தியாக மண்டபம் என்றும் பெயருண்டாயிற்று. 18) ஸ்ரீஇராமானுஜருக்காக சோழ மன்னனிடம் கண்களையிழந்த கூரத்தாழ்வான் அவர் நியமனப்படியே வரதராஜ ஸ்தவம் அருளிச் செய்து இழந்த தம் கண்களைப் பெற்றது இத்தலத்தில் தான். 19) இப்பெருமானைத் திருக்கச்சி நம்பிகள் தேவராஜஷ்டகம் என்னும் ஸ்தோத்திரத்தாலும், வேதாந்த தேசிகர் வரதராஜ பஞ்சாசத் என்னும் ஸ்தோத்திரத்தாலும், மணவாள மாமுனிகள் தேவராஜ மங்களம் என்னும் ஸ்தோத்திரத்தாலும் தேவராஜ ஸ்துதி செய்துள்ளனர். 20) மணவாள மாமுனிகள் இங்கு அழகிய மணவாள ஜீயர் ஒருவரை நியமனம் செய்திருந்தார். 21) முஸ்லீம்களின் படையெடுப்பு நிகழ்ந்தபோது இங்குள்ள உற்சவரை கி.பி. 1688இல் திருச்சி உடையார் பாளையத்தில் பாதுகாத்து வைத்திருந்தனர். 1710இல் ஆத்தான் ஜீயர் தம் சீடர் ராஜா தோடர்மாலின் உதவியுடன் இப்பெருமாளை மீண்டும் காஞ்சிக்கே கொணர்ந்தார். இதனால் இக்கோவிலின் நிர்வாகம் ஆத்தான் ஜீயரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதை விவரிக்கும் கல்வெட்டு ஒன்று தாயார் சன்னதியின் முகப்பிலேயே உள்ளது. இங்கு ராஜா தோடர்மாலுக்கும் சிலை உண்டு. இப்பெருமானை மீட்டுக் கொணர்ந்த தினமான பங்குனி உத்திரட்டாதி தினம் உடையார்பாளைய உத்ஸவம் என்ற பெயராலேயே இன்றும் நடைபெறுகிறது. |