தேவர்கள் வந்ததைக் கண்ட அசுரர்கள் தாமும் கூட்டம் கூட்டமாய் அவர்களைப் பின் தொடர ஆரம்பித்தனர். ஆனால் பிரம்மனோ தேவர்களை மட்டும் எதிர்கொண்டழைத்து அசுரர்களை கண்டும் காணாமல் இருந்ததால் அவர்கள் மிகவும் சினங்கொண்டனர். யாக சாலையை விட்டு வெளியேறிய அவர்கள் பிராமண வடிவம் கொண்டு நேராக சரஸ்வதிதேவியின் இருப்பிடம் வந்து சேர்ந்தனர். பத்னி இல்லாமல் யாகம் செய்ய பிரம்மன் தனது மமதையால் தங்களைப் பழித்துச் செயல்படுவது போலல்லவா இது இருக்கிறது என்று பலவிதமாகக் கூறி வாணியின் கோபத்தைக் கிளற மிகவும் சினந்த சரஸ்வதி நானும் பலவிதமான முயற்சிகள் செய்துவிட்டேன். என்ன செய்யலாமென நீங்கள் கூறுங்கள் என்று கேட்க, அதற்கவர்கள் கொடிய அரக்கன் ஒருவனை அக்னி பிழம்பாய் படைத்து அனுப்பினால் அவன்யாக குண்டலியின் வேள்வித் தீயைத் தன்னுள் கிரஹித்துக் கொண்டு வந்துவிடுவான் என்று சொல்ல தன் சக்தி முழுவதையும் பிரயோகித்து ஒரு கொடிய அரக்கனைப் படைத்தாள் சரஸ்வதி. மாய நலன் என்பது அவனது பெயர். கொடிய அக்கினி ரூபத்தில் யாகத்தை அழிக்க வந்த அந்த அக்கினி ரூப அசுரனை அவ்விடத்தில் பிரவேசித்த பெருமாள் தனது கையில் தீபம் போல் ஏந்தி யாகசாலைக்கு மேலும் வெளிச்சம் நல்கினார். இவ்வாறு அக்கினியைக் கையில் தீபம் போல் ஏந்தி நின்றதால் தீபப் பிரகாசர் ஆனார். தூய தமிழில் விளக்கொளிப் பெருமாள் ஆனார். மூலவர் தீபப் பிரகாசர், விளக்கொளிப் பெருமாள் திவ்யப் பிரகாசர், என்னும் திருநாமமும் உண்டு. மேற்கு நோக்கி நின்ற திருக்கோலம். தாயார் மரகதவல்லி தீர்த்தம் சரஸ்வதி தீர்த்தம் விமானம் ஸ்ரீகர விமானம் காட்சி கண்டவர்கள் சரஸ்வதி |