பக்கம் எண் :

295

46. திருவேளுக்கை

     விண்ணகரம் வெஃகா விரிதிரை நீர் வேங்கடம்
          மண்ணகரம் மாமாட வேளுக்கை மண்ணகத்த
     தென்குடந்தை தேனார் திருவரங்கம் தென் கோட்டி
          தன் குடங்கை நீரேற்றான் தாழ்வு - (2343)
                          மூன்றாந்திருவந்தாதி - 62

     என்று எம்பெருமான் எழுந்தருளியுள்ள திவ்யதேசங்களை
மறக்கவொன்னா மனப்பாங்கினால் மன்னு தமிழ்ப்பாக்களால் மங்களாசாசனம்
செய்யும்போது மண்ணகரம் மாமாட வேளுக்கை என்று பேயாழ்வாரால் பாடிப்
பரவசிக்கப்பட்ட இத்தலம் காஞ்சிபுரத்திலேயே விளக்கொளி பெருமாளின்
திருக்கோவிலிலிருந்து இடதுபுறம் செல்லக்கூடிய சாலையில், மூன்று
தெருக்களைக் கடந்து பிரகாசமாகத் தென்படுகிறது. அட்டபுயக்கரத்தான்
சன்னதியிலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

வரலாறு

     வேள் என்ற சொல்லுக்கு ஆசை என்று பொருள். நரசிம்ம மூர்த்தி
இவ்விடத்தில் ஆசையுடன் இருக்க எண்ணியதால் வேளிருக்கை என்றாகி
காலப் போக்கில் வேளுக்கை ஆகிவிட்டது.

     எம்பெருமான் நரசிம்ம அவதாரம் எடுத்த காலை ஹஸ்திசைலம்
என்னும் குகையிலிருந்து புறப்பட்டு இரண்யனது மாளிகையின் தூணிலிருந்து
வெளிப்பட்டபோது வேறொரு நரசிம்ம வடிவங்கொண்டு தம்மைத் தாக்க வந்த
அசுரங்களை விரட்டிக் கொண்டே செல்ல இவ்விடத்திற்கு வந்தது அசுரக்
கூட்டங்கள் கண்காணா இடத்திற்கு ஓடி ஒளிந்து கொண்டதால், இனி
அசுரர்கள் வந்தாலும் அவர்களை எதிர்ப்பதற்கு இவ்விடமே பொருத்தமானது
என்றெண்ணி, இவ்விடத்தின் எழிலில் பற்றுக் கொண்டு இங்கேயே இருக்க
ஆசைப்பட்டார். இவ்விடத்திலேயே யோக நரசிம்மராகி அமர்ந்து விட்டார்.
காமாஷிகா நரசிம்ம சன்னதி என்றும் இதற்கொரு பெயருண்டு.

மூலவர்

     அழகிய சிங்கர், நரசிம்மர், ஆள் அரி, முகுந்த நாயகன் என்றும்
திருப்பெயர்கள் உண்டு. மேற்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம்.