அகமாகக் (இருப்பிடமாக) கொண்டு திகழ நீரகத்தாய் ஆனவர் போலும். தனது எல்லாத் திருக்கோலங்களையும் காட்டிக் கொடுத்த எம்பெருமான் (பக்தர்கட்காக, அவர்களின் வேண்டுகோட்காக) பிரளயம் முடிவுற்ற பின்மேற்கொள்ளும் திருக்கோலத்தையும் காட்டி கொடுக்குமாறு துதித்து நின்றார்க்கு இந்த ஆலிலைத்துயின்ற கோலத்தையும் காட்டிக் கொடுத்தார் போலும். மேற்காண் பாடலுக்குப் பொருள், பிரளய காலத்தில் எம்பெருமான் மேற்கொள்ளும் திருக்கோலத்தையும் (அவதாரத்தை) தனக்கு காட்டியருள வேண்டுமென மார்க்கண்டேயர் தவமிருக்க அவருக்கு இத்தலத்தில் உலகழிவின் போது எடுக்கவிருக்கும் ஆலத்திலை திருக்கோலத்தைக் காட்டிக்கொடுத்தார். மறைகட்கு வேர்போன்று திகழும் எம்பெருமானை மார்க்கண்டேயருக்கு ஆலத்திலை திருக்கோலத்தைக் காட்டிக் கொடுத்தவனை, நீரகத்தானை என் நெஞ்சகத்தின்பால் பெற்றேனே என்கிறார். வேதங்களுக்கு வேராகத் திகழ்ந்து, என் நெஞ்சகத்தே வாழும் நீரகத்தானே நீ, மார்க்கண்டேயனுக்கு எவ்விதம் பிரளயகால ஆலத்திலை திருக்கோலத்தைக் காட்டிக் கொடுக்கிறாயோ, என்று பேராச்சர்யப்படுகிறார் பிள்ளைப் பெருமாளையங்கார். இப்பாடலும் எம்பெருமானின் நீரகத்தன்மைக்கு சான்று பகர்கிறது. |