இம்மூன்றும் காஞ்சிக்கு வெளியில் மிகத் தொலைவிலோ அல்லது காஞ்சிக்கு அருகாமையிலோ ஒன்றுக்கொன்று சமீப தூரத்தினதாகவோ இருந்திருக்க வேண்டும். அதனாற்றான் ஏதோவொரு காரணத்தால் இடம் பெயர வேண்டிய சூழல் உருவானவிடத்து மூவரும் ஒருங்கே பெயர்ந்துள்ளனர். காஞ்சிக்கு வெளியே உள்ள ஊர்களில் இத்தலத்துப் பெயர்களின் சாயல்களை கொண்ட ஊர்களையோ, வரலாற்று ரீதியாக அழிந்துபட்ட அல்லது இன்றைய வரலாற்றுப் போக்கோடு வர இயலாதவாறு மண்டிக் கிடந்து விட்ட ஏதாவது சில தொல்லியல் கோவில்களையோ ஆய்வு செய்யும்போது அல்லது ஆய்வு செய்தால் உண்மை வரலாம். இவைகள் நிச்சயமாக காஞ்சிக்குள்ளே இருந்திருக்க முடியாது. அவ்வாறு இருந்திருப்பின் ஊரகத்தை மங்களாசாசனம் செய்யும் திருமங்கையாழ்வார் கச்சி ஊரகத்தாய் என்று விளிப்பதைப் போல மற்ற தலங்களையும் கச்சி நீரகத்தாய், கச்சி காரகத்தாய் என்று விளித்திருப்பார். ஊரகம் தவிர மற்ற இந்த மூன்று திவ்ய தேசங்கட்கு காஞ்சியின் சம்பந்தத்தை திருமங்கை அருளவில்லை. மேலும் நீரகத்தை மங்களாசாசனம் செய்யும்போது நீரகத்தாய் நெடு வரயினுச்சி மேலாய் (2059) என்று நீரகத்தானுக்கு நெடுவரை வேங்கடத்தானோடு சம்பந்தங் காட்டுகிறார். அதே சமயம், அதே பாடலில் ஊரகத்தானை மங்களாசாசனம் செய்யும் போது “நிறைந்த கச்சி ஊரகத்தாய்” என்று ஊரகத்திற்கும் காஞ்சிக்கும் உள்ள தொடர்பை உறுதிப்படுத்துகிறார். எனவே காஞ்சிக்கு வெளியே இருந்த இந்த மூன்று திவ்ய தேசத்து எம்பெருமாள்களும் அவர்கள் ஊரைவிடுத்து இந்த ஊரகத்திற்குள் வந்தெழுந்தருளியமை வரலாற்றின் அடிப்படையிலும் சமயஞ் சார்ந்த கருத்துக்களின் அடிப்படையிலும் ஆராயத்தக்கதாகும். வரலாறு வாமன வடிவம் கொண்டு மகாபலியிடம் மூன்றடி மண் வேண்டிய எம்பெருமான் திரு விக்கிரம அவதாரம் எடுத்து மகாபலிச் சக்ரவர்த்தியை பாதாளத்திற்கு அனுப்பினான். பாதாளம் புக்க மாகபலிக்கு, தம்பொருட்டு எம்பெருமான் உலகளந்து நெடிய திருமேனியுடன், திருவிக்ரமனாய் நின்ற திருக்கோலத்தை முழுமையாக தரிசிக்க முடியவில்லையே, எம்பெருமானின் பாதம் பட்டு பாதாள லோகத்தில் புதுந்துவிட்டோமே, நம்பொருட்டு எழுந்த அவதாரத்தின் முழு ரூபத்தை முழுமையாக காணமுடியவில்லையே என்றெண்ணி |