நிழல்களில், கோபுர நிழல்களில், எம்பெருமான்களின் திருவடி நிழலில்] வைத்தார் என்பர். இங்கு காரகத்து எம்பெருமானை மங்களாசாசனம் செய்யவந்தார். நெஞ்சமோ நீரகத்திற்கு தாவியது. அங்கிருந்து நெடுவரை என்னும் வேங்கடம் மேவியது. நிலாத்திங்கள் துண்டன்பால் நெகிழ்ந்தது. பின்பு கச்சி சென்று ஊரகத்தே புகுந்தது. உடனே வெஃகாவென்று வெருவியது. அவ்வமயமே அந்தராத்மியாய் பெருமான் இருப்பது நினைவுக்கு வரவே உள்ளுவாருள்ளத்தாய் என்று மங்களாசாசனமானது. அந்நிலையில் தாம் காரகத்து திவ்ய தேசத்தில் இருப்பது நினைவுக்கு வரவே உலகமேத்தும் காரகத்தாய் என்று மங்களாசாசனம் செய்தார். அந்நொடியிலேயே காரகம் விடுத்துக் கார்வானம் புகுந்தார். அப்போது கள்வனின் நினைவும் வந்து விட்டது. எனவே ‘கள்வா’ என்று மங்களாசாசனமிட்டார். அப்போதும் தம் நெஞ்சைவிட்டு எப்போதும் நீங்கா நிற்கும் காவிரியின் நினைவு வந்தது. உடனே காவிரியின் தென்பால் மன்னு பேரகத்தாய் என்று திருப்பேர் நகரைக் கூவினார். இங்கெல்லாம் இருப்பவன் என் நெஞ்சத்தினின்றும் பேராதுள்ளானே என்று ஆத்மா அவனைவிட்டு நீங்காத் தன்மை பெற்றதை நிலைநிறுத்துகிறார். தற்போது தலைப்பில் உள்ள பாடலைப் பாருங்கள். இவரது ஆத்மா காரகத்தில் நின்று கொண்டிருக்கும் போதே திவ்ய தேசங்களில் சஞ்சரித்தமைதெற்றென விளங்கும். இத்துடன் நின்றாரில்லை உடனே அடுத்த பாடலில் வங்கத்தால் மாமணி வந்ததுந்து முந்நீர் மல்லையாய் என்று திருக்கடன் மல்லை (2060) சென்றது. என்னே இவர்தம் அர்ச்சாவதார ஈடுபாடு. எனவே இவர் ஆத்மாவை வெயிலில் வைத்தவர் என்பதற்குத் தடையேதுமுண்டோ. |