பக்கம் எண் :

327

திவ்யதேசத்தில் உள்ள எம்பெருமானாகிய கள்வனைத்தான் மங்களாசாசனம்
செய்ததாகக் கொள்ள வேண்டும்.

     இதில் உள்ள கள்வர் என்னும் சொல் காஞ்சியில் காமாட்சியம்மன்
கோவிலுக்குள் உள்ள ஆதிவராகப் பெருமாளை மங்களாசாசனம் செய்ததாகக்
கொண்டு அத்தலத்திற்கும் தலைப்பிட்ட இப்பாடலையே மங்களாசாசனப்
பாடலாக நம் முன்னோர்கள் எடுத்தாண்டுள்ளனர்.

     அவ்வாறாயின் ஆழ்வார் கார்வானத்துள்ளாய் கள்வா என்று குறிப்பிட்டு
சொல்லியிருக்க வேண்டியதில்லை. காரகத்தாய், நீரகத்தாய் என்பதைப்
போன்ற கார்வானத்தாய் என்று மட்டும் மொழிந்திருப்பார்.
கார்வானத்துள்ளாய் கள்வா என்று தனிமைப்படுத்தி தெளிவுபடுத்திக்
காட்டுவதால் ‘கள்வர்’ என்னும் சொல் திருக்கார் வானத்து எம்பெருமானுக்கே
உரித்ததன்றி, காமாட்சியம்மான் கோவிலுக்குள் உள்ள ஆதிவராகப்
பெருமாளுக்கு உரித்ததன்று என்று முடிவு கட்டலாம்.

     அவ்வாறாயின் காமாட்சியம்மன் கோவிலுக்குள் உள்ள கள்வன் யார்,
யாரிவர் என்று திருமங்கையாழ்வார் வினவியதைப் போன்று வினவத்
தோன்றுகிறது.

     எனவே காமாட்சியம்மன் கோவிலுக்குள் உள்ள எம்பெருமான்
மங்களாசாசனம் பெருமாள்தானா, என்ற சந்தேகம் எழுகிறது. எத்தனையோ
சிவாலயங்களில் விஷ்ணு அவதார மூர்த்திகள் இருப்பதுபோல காமாட்சியம்மன்
கோவிலுக்குள்ளும் இருந்திருக்கலாம்.

     பிற்காலத்தே ஏதோ ஒரு காரணத்தை முன்னிட்டு திருவூரகம் திவ்ய
தேசத்திற்குள் 3 எம் பெரும்மான்கள் எழுந்தருளி இடங்கொண்டது போல,
ஏதோ ஒரு காரணத்தை முன்னிட்டு ஆதிவராகப் பெருமாள் என்ற
திருநாமங்கொண்ட பெருமாள் காமாட்சியம்மன் கோவிலுக்குள் வந்திருக்கலாம்.

     அல்லது ஒரு காலத்தில் வராஹ வழிபாடே இந்தியா முழுவதும்
இருந்தபோது காஞ்சியிலும் தற்போது காமாட்சியம்மன் கோவில் உள்ள
இடத்தில் வராஹச் சேஷத்ரம சிறிய அளவில் இருந்திருக்கலாம். கால
ஓட்டத்தின் பின்னடைவில் வராஹச் சேஷத்ரம் இருந்த இடத்தில்
காமாட்சியம்மன் கோவில் உண்டாகியிருக்கலாம்.

     காமாட்சியம்மன் கோவிலுக்குள் வராஹமூர்த்தி இருப்பதும் உகந்ததே
என்றெண்ணி, அந்த ஆதிவராக மூர்த்திக்கு வழிபாடுகள் ஏற்பட்டிருக்கலாம்.