பக்கம் எண் :

328

     இவ்விதமான காரணங்களால் காமாட்சியம்மன் கோவிலுக்குள் உள்ள
ஆதிவராக மூர்த்தி கள்வரல்ல என்று தலைக்கட்டலாம்.

     மேலும் கார்வானத்துள்ளாய் கள்வா என்பது ஒரு தனிச் சொல்லாகும்.
அஃதாவது இடப்பெயரும், பெருமாளின் பெயரும் சேர்ந்த தனிச்சொல்லாகும்.
திருக்குடந்தை ஆராவமுதன், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, ஆதனூர்
ஆண்டளக்கும் ஐயன், கச்சி வரதராஜன், திருவனந்தபுர பத்மநாபன்,
திருவேங்கடத்து ஸ்ரீனிவாசன், என்பது போன்று ஊர்ச் சொல்லுடன் பெயர்ச்
சொல்லும் சேர்ந்த காரண குறிச்சொல்லேயன்றி தனித்தனி சொற்களாகக்
கொள்ளவியலாது.

     (தமிழிலக்கியங்களிலும், மதுரை கூலவாணிகன், ஒக்கூர்மாசாத்தியார்,
கோவூர் கிழார், மாங்குடி மருதனார் என்று ஊர்ப்பெயரும் கவிஞர் பெயரும்
கலந்து வருவதும் இங்கு எடுத்துக்காட்டத் தக்கதாகும்)

     எனவே கார்வானத்துள்ளாய் கள்வா என்ற சொல்லை இரண்டு திவ்ய
தேசங்களுக்கான மங்களாசாசனமாகக் கொள்ளாமல் கார்வானமாகிய ஒரே
திவ்ய தேசத்திற்கான மங்களாசாசனமாகக் கொள்ள வேண்டும் என்பதே
அடியேனின் முடிவு.

     அவ்வாறாயின் காமாட்சியம்மன் கோவிலின் உள்ளே உள்ள
ஆதிவராகப் பெருமானின் மங்களாசாசனத் தொன்மை தீர்த்தம், விமானம்,
ஸ்தல இருப்பிடம் போன்றன ஆராய்தற்குரியதாகும்.

மூலவர்

     கள்வர், வடக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.

தாயார்

     கமலவல்லி, தாமரையாள்

தீர்த்தம்

     கௌரீ தீர்த்தம், தராதர தீர்த்தம்

விமானம்

     புஷ்கல விமானம்

காட்சி கண்டவர்கள்

     பார்வதி