பக்கம் எண் :

339

     6. பிள்ளைப் பெருமாளயங்கார் தமது நூற்றெட்டு திருப்பதியந்தாதியில்
இதே வண்ணமயக்கை நிரல்படுத்தி இத்தலத்திற்குப் பாடல் இட்டுள்ளார்.

     எம்பெருமானே நீ நான்கு யுகங்களில் நான்கு வண்ணங்களில் திருமேனி
கொண்டிருந்தாய். அதுவும் சரியான காரணத்தோடு அவ்வகை வண்ணம்
கொண்டிருந்தாய்.

     கிரேதாயுகத்தில் மக்களிடையே சத்துவ குணம் நிரம்பி இருந்தது. அந்த
அநுபவத்திற்கேற்றவாறு நீயும் பால் நிறவண்ணங்கொண்ட திருமேனி
பெற்றிருந்தாய். திரேதாயுகத்திலும் துவாபர யுகத்திலும் ராஜோ குணமும்,
தமோ குணமும் கலந்தவராய் மக்கள் இருந்தனர். அதில் நீயும் கருநீலம்
கலந்த பச்சை நிறத் திருமேனி பெற்றிருந்தாய்.

     கலியுகமோ தமோ குணம் (நேரத்திற்கேற்ற குணம்) கொண்ட யுகமாக
இருப்பதால் நீயும் காளமேகம் போன்ற திருமேனி பெற்றாய்.

     இப்போது அவரின் பாடலைப் பாருங்கள் கண்டறிந்தும் கேட்டறிந்தும்
தொட்டறிந்தும் காதலால் உண்டறிந்தும் மோந்தறிந்தும் முய்யேனே -
பண்டைத் தவள வண்ணா, கார்வண்ணா, சாமவண்ணா, கச்சிப் பவள வண்ணா
நின் பொற்பாதம்.

     கச்சியில் இருக்கும் பவள வண்ணனே, நின் பொற்பாத மகிமைகளை
பக்தியென்னும் காதலால் கண்களால் கண்டுணர்ந்தும், காதாற் கேட்டுணர்ந்தும்
கையால் தொட்டுணர்ந்தும், நாவினால் சுவைத்தறிந்தும் (பாசுரங்களால்
சேவித்து உணர்தல்) மூக்கினால் முகந்துணர்ந்தும் ஈடேறகில்லேன். நீதானே
முந்திய யுகங்களில் வெண்ணிற வண்ணனாகவும், கருநிற வண்ணனாகவும்,
சாமநிற வண்ணனாகவும் வந்தாயல்லவா பவள வண்ணனே என்கிறார்.