பக்கம் எண் :

380

     15. எம்பெருமான் 360 கன்னிகைகளை இரண்டு கன்னிகளாக்கி ஏற்றுக்
கொண்டார் என்றும் சொல்வர். ஒருவர் கோமளவல்லி. (தனிக் கோவில்
நாச்சியார்) இன்னொருவர் அகிலவல்லி, இத்திருநாமத்தில் அனைத்து
ஜீவராசிகளும் அடங்கி விட்டதாக ஒரு ஐதீஹம். ஒவ்வொரு தினமும் அவர்
திருமணம் கொண்டதும் ஓர் அடையாளம். அதாவது பிறக்கும் உயிர்கள்
ஒவ்வொன்றையும் ஒவ்வொரு வினாடியிலும் ஏற்று அவைகட்கு நாயகனாக
அருள்புரிகிறார் என்பதும் ஐதீஹம். (அதாவது நாமெல்லாம் நாயகி போன்றும்
எம்பெருமான் ஒருவரே நாயகன் என்றும் சொல்லும் வைணவக் கொள்கை
ஈண்டு நோக்கத்தக்கது)

     16. நித்ய கல்யாணப் பெருமாள் எழுந்தருளியிருக்கும் இத்தலத்தில்
மணமாகாத ஆண்களும் பெண்களும் திருமணத்தின் பொருட்டுவேண்டிச்
செல்வர் அவர்கட்கு திருமணம் நடைபெறுவதும் கண்கூடு.

     17. திருவிடவெந்தை எம்பெருமானைப் பற்றி தமது 108
திருப்பதியந்தாதியில் பிள்ளைப் பெருமாளைய்யங்கார் கூறுகிறார்.

     எத்தனையோ பிறவிகள் போயிற்று. அவற்றில் எல்லாம் செய்த கொடு
வினைகள் விடாதே பின்தொடர்ந்து விரட்டி வந்து வாட்டியது. இந்தப்
பிறவியிலோ நான் வேறுயாருக்கும் அடிமை செய்யாது எம்பெருமான்
ஒருவனுக்கே அடிமை பூண்டொழுகலுற்றேன். இதற்குமுன் நான் குற்றேவல்
செய்தேன். அதாவது மானிடர்க்கு அடிமைப்பட்டு வயிறு வளர்த்தேன். இது
குற்றமுள்ள அடிமையாயிற்று. ஆனால் இந்தப் பிறவியிலோ நான்
எம்பெருமான் ஒருவனுக்கே அடிமை செய்வதென்று தீர்மானித்து அதன்படி
ஒழுகினேன். எனவே இது வழுவிலா அடிமையாயிற்று.

     இவ்வாறு திருவிடந்தை எம்பெருமானுக்கே அடிமைப்பட் டேனென்று
தெரிந்ததும் என்னைப் பின் தொடர்ந்து வந்த பாவமெல்லாம் பயந்து
கொண்டு ஓடிப்போய்விட்டன.
 

     நின்று திரியும் பிறவியெல்லாம் நேர்வித்துக்
     கொன்று திரியும் கொடுவினையார் - இன்று
     வெருவிட வெந்தைக்கே விழுமிய தொண்டானேன்
     திருவிட வெந்தகைக்கே செறிந்து.