மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வுத்துறையின் கீழ் இயங்கும் இத்தலத்தின் (SSI 258 of 1910) கல்வெட்டு செய்தியைக் கூறுகிறது. 8. முதல் ராஜராஜசோழன் ராஜராஜசோழத் தேவர், குலோத்துங்க சோழன் போன்றோர் இங்கு கைங்கர்யம் செய்து, இவர்கள் தொடர்பான கல்வெட்டுகளும் காணப்படுவதால் இது ஒரு காலத்தில் சோழநாட்டுக்கு அடங்கிய பகுதியாகும், சோணாட்டுத் திருப்பதியாகவும் விளங்கி இருத்தல் வேண்டும். 9. கலிச்சிங்கன் என்ற பெயரில் திருமங்கையாழ்வாருக்கு இங்கு ஒரு மடம் இருந்த செய்தியும் கல்வெட்டால் அறிய முடிகிறது. இது மிகவும் தொன்மையான மடம். மலையாளத்திலிருந்து யாத்திரையாக வந்த சில வியாபாரிகள் இத்தலத்தின் தீப கைங்கர்யத்திற்கு பொன் அளித்த செய்தியும் கல்வெட்டால் அறியப்படுகிறது. 10. யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட பல்லக்கு ஒன்று இக்கோவிலில் உள்ளது. கொச்சி மகாராஜாவின் அரண்மனையில் ஒன்றும், இங்கொன்றுமாக இந்தியாவிலேயே இந்த இரண்டு யானைத் தந்த பல்லக்குகள்தான் உள்ளதென தொல் பொருள் ஆய்வுத்துறையினர் கூறுகின்றனர். 11. திருமங்கையாழ்வாரால் மட்டும் 13 பாசுரங்களில் மங்களாசாசனம் செய்யப்பட்டதலம். தமது சிறிய திருமடலில் திருமங்கையாழ்வார் இக்கிராமத்தின் எழிலைச் சொல்லுகிறார் பாருங்கள். “காரார் குடந்தை கடிகை கடன்மல்லை ஏரார் பொழில் சூழ் இடவெந்தை நீர்மலை” | 12. திருவிடவெந்தை என்று சொன்னால் யாருக்கும் தெரியாது. திருவடந்தை திருவடந்தை என்று சொன்னால்தான் தெரியும். சென்னையிலிருந்து வரும் பேருந்துகளிலும் திருவடந்தை என்ற பெயரே காணப்படுகிறது. 13. மணவாள மாமுனிகளும் மங்களாசாசனம் செய்துள்ளார். 14. இன்று சிறப்புற்றிருக்கும் கோவளம் என்பதே ஒரு காலத்தில் பிராட்டியின் அவதார மகிமையைக் குறிக்கும் முகத்தான் கோமளவல்லிபுரம் என்று வழங்கப்பட்டதாகும். இங்குதான் காலவரிஷி தவம் புரிந்தார். |