பூக்களைப் பறித்து வைத்து கிழக்கு நோக்கிச் செல்கையில் சமுத்திரம் வழியை அடைத்துக்கொண்டிருப்பதைப் பார்த்து பக்தி மேலீட்டால் சமுத்திர ஜெலத்தைக் கைகளால் இறைத்து விடலாமென இறைக்க ஆரம்பித்தார். இவரது பக்தியை மெச்சிய எம்பெருமான் இவர்படும் துயரைப் போக்க காட்சி கொடுக்க எண்ணியவராய் ஒரு முதியவர் வேடங்கொண்டு இவரிடம் வந்து அருந்துவதற்கு ஆகாரம் கேட்க, அந்த நிலையிலும் அவருக்கு ஆகாரம் கொடுக்க எண்ணிய ரிஷி தாம் கொண்டுவந்த மலர்க்கூடையை அவரிடம் கொடுத்து இதை வைத்துக்கொண்டிரும். யாம் சென்று ஆகாரம் கொண்டு வருகிறோம் என்று சொல்லிச் செல்ல, அவர் ஆகாரம் கொண்டு வருவதற்குள் எம்பெருமான் மாமல்லைக்கடலில் ரிஷியால் கொணரப்பட்ட பூக்களையெல்லாம் சூடிக்கொண்டு ஆதிசேடன் மேல் சயனித்திருக்கும் திருக்கோலத்தில் சேவை சாதிக்க இதைக் கண்டு பேரானந்தமுற்ற ரிஷி எம்பெருமானின் பாதத்தருகில் அமரும் பாக்கியம் தமக்கு வேண்டுமென்று கேட்க பெருமானும் அவ்வாறே அருளினார். இவ்விதம் அந்த ஸ்தலத்திலேயே சயன திருக்கோலத்தில் காட்சி யருளியமையால் தலசயனப்பெருமாள் என்னும் திருநாமம் உண்டாயிற்றென்பர். தற்போதுள்ள கோவிலும் வெறுந்தரையிலே (ஆதிசேடன் மீது) எம்பெருமான் சயனித்திருக்க புண்டரீக மஹரிஷி கை கூப்பிய வண்ணம் அருகில் உள்ளார். மூலவர் ஸ்தல சயனப் பெருமாள். புஜங்க சயனம் கிழக்கு நோக்கிய திருக்கோலம். உற்சவர் உலகுய்ய நின்றான் தாயார் நிலமங்கைத் தாயார், தனிக்கோயில் நாச்சியார் தீர்த்தம் புண்டரீக புஷ்கரணி கருட நதி காட்சி கண்டவர்கள் புண்டரீக மஹரிஷி |