14) ஸ்ரீமணவாள மாமுனிகள், பிள்ளை லோகம் ஜீயர் ஆகியோரும் இங்கு எழுந்தருளியுள்ளனர். 15) இப்பெருமாள் (ஏனப்பிரான்) வலது திருக்கரத்தை தமது திருமார்பின் மீது உபதேச முத்திரையாக வைத்து ஞானத்தமிழ் புரிந்த நான் என்பதை விளக்குகிறார். 16) பல்லவ மன்னர்கள் மட்டுமன்றி, இராஜ ராஜ சோழன் தொண்டை நாட்டு மன்னர்கள், விஜய நகர சாம்ராஜ்ய மன்னர்கள் ஆகியோரும் இங்குள்ள கோவில் கட்டுமானங்களில் பங்குபெற்றுள்ளனர். 17) மாமல்லபுரத்திலும் மற்றும் இதன் மருங்கமைந்த குன்றுகளிலும், அமைந்துள்ள மண்டபங்கள், குகைகள், தேர்கள், சிறிய கோவில்கள், சிற்பங்கள் ஆகியன பல்லவர்களின் ஆட்சிக் காலம் இன்னும் சிறிதே தமிழகத்தில் நீடித்திருந்தால் மாமல்லையை உலக அதிசயங்களுள் ஒன்றாக வைப்பதற்கு தகுதி பெற்றதாகச் செய்திருப்பர். குறிப்பு: திருமங்கை தலசயனம் என்று மட்டும் குறிக்கின்றார். ஆனால் அவருக்கு முன்னோரான திருமழிசையாழ்வார் நீர்ப்பாயல் எனக் குறிப்பிட்டுள்ளதை கடல்மல்லைக்கு மங்களாசாசனமாக எடுத்தாளலாம். திருமங்கைக்கு முந்திய காலத்தில் சலசயனம் என்றே புகழ்பெற்றிருந்ததென தெரியவருகிறது. கடல்கோள் நிகழ்வுக்கு பின்பு தலசயனம் என்றே பெயர் நிலவியதால் திருமங்கையாழ்வார் தலசயனம் என்றே மங்களாசாசித்தார் என்று சொல்லலாம். 18) பிள்ளைப் பெருமாளைய்யங்கார் நூற்றெட்டுத் திருப்பதியந்தாதியில், செறிந்த பனைபறித்துத் திண் களிற்றை சாடி முறிந்து விழப் பாகனையு மோதி - யெறிந்து தருக்கடன் மல்லைக் குமைத்தான் தஞ்சமென் நெஞ்சே திருக்கடன் மல்லைக்குள் திரி. | தன்னைத் தாக்க வந்த கம்சனது குவாலய பீடம் என்னும் யானையை பனைமரத்தைப் பிடுங்கி எறிந்து வீழ்த்தினான் கண்ணன். அது மதகளிற்றின்மேல் பட்டு முறிந்து விழுந்து யானைப் பாகனையும் கொன்றது. அப்பேர்ப்பட்ட தோள்வலிமை கொண்ட (உந்து மதகளிற்றின் ஓடாத தோள் வலிமை) கண்ணபிரான்தான் திருக்கடல் மல்லையில் ஸ்தலசயனப் பெருமாளாக சயனித்துள்ளான் அவனே தஞ்சமென்று திரி என்கிறார். |