மலையாள திவ்யதேசங்கள் 13ல் பஞ்ச பாண்டவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட, 5 திவ்ய தேசங்கள் உண்டு. இவைகளைப் பாண்டவர் கோயில் என்றே அழைக்கின்றனர். அவைகள். 1. திருச்சிற்றாறு - தர்மன் பிரதிஷ்டை செய்தது. 2. திருஆரம்முளா - அர்ஜு னன் 3. திருப்புலியூர் - பீமன் 4. திருவன்வண்டூர் - நகுலன் 5. திருக்கடித்தானம் - சகாதேவன். மலையாளத்தில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் ஓணம் திருவிழா மிகப் பிரசித்தி பெற்றதாகும். பெருமாள் வழிபாட்டுடன் இணைந்த இந்த திருவிழா சங்ககாலத்தே தமிழகம் முழுவதும் ஆவணித்திருவிழா என்ற பெயரில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவின்போது போர் வீரர்கள் நீல நிறமான ஆடைகள் அணிந்து தோன்றுவர். விருந்துண்டு மகிழ்வர் என்று மதுரைக் காஞ்சி செப்புகிறது. இந்த விழா இன்று சேர நாட்டில் மட்டும் மரபு குன்றாமல் கொண்டாடப்படுகிறது. சேரநாட்டில் கிடைக்கப்பெற்ற கி.பி. 9 ஆம் நூற்றாண்டின் தாணு இரவியன் கல்வெட்டில் ஓணம் பண்டிகை பற்றிய செய்திகள் அறியக் கிடைக்கின்றன. கேரளத்தில் கோவில்களைக் காப்பதிலும், புனருத்தாரணம் செய்வதிலும் கைங்கர்யங்களில் ஈடுபடுதலிலும் இளைஞர்கள் காட்டக்கூடிய ஆர்வம் நமது தமிழகத்தில் இல்லை. சிறப்புற்றுத் திகழ்ந்த சேர நாடான மலையாளத்தில் ஓர் பதின்மூன்றும் மலைநாடு என்று சொல்லப்பட்ட அந்த 13 திவ்ய தேசங்கள் யாவையெனப் பின்வரும் பாடல் பகர்கிறது. மாவனந்த புரம் வண் பரிசாரம் காவலுள்ள காட்கரை மூழிக்கழம் இலகிடு புலியூ ரெழிற் செங்குன்றூர் நலமிக வளித்திடும் நாவாய் வல்லவாழ் மற்றும் வண்வண்டூர் வாட்டாருடனே வித்துவக் கோடு மேலாங் கடித்தானம் மதிளாறன் வினை மலைநாட்டுப் பதி பதிமூன்று மவைப் பணிந்து போற்றுவோம். | மாந்தரே, மால்மயக்குப் பட்டோரே, மாதவனருள் பெற்றோரே வம்மினோ, மலையாளம் புவோம் வம்மினோ! |