இவைகளைக் காணும்போது நம்பெருமாளுக்கு யாரோ பூஜை செய்வது போன்ற உணர்வு ஏற்படுகிறது. இந்த வழிபாட்டு முறையை மாற்றி தூய வைணவ நெறியிலான வழிபாட்டு முறையை இங்கு ஏற்படுத்த வேண்டுமென ஸ்ரீஇராமானுஜர் திருவுள்ளங்கொண்டு மலையாளத்தின் எல்லைக்குள் பிரவேசம் செய்ததாகவும், இதையறிந்த போத்திகள் பகவானிடம் தோத்திரம் செய்து தாங்கள் செய்துவரும் வழிபாட்டு முறைகளையே பெருமாள் தொடர்ந்து ஏற்றுக்கொள்ள வேண்டுமெனப் பிரார்த்தித்து கண்ணீர் மல்க வேண்டியதாகவும், பக்தர்களின் ஆசையை நிறைவேற்றி வைக்கும் பக்தவத்சலனான பெருமாள், மலையாள நாட்டின் எல்லையுள் ஓரிடத்தில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த இராமானுஜரை அப்படியே எடுத்து வந்து திருக்குறுங்குடிக்கு அருகில் ஒரு பாறையில் படுக்க வைத்ததாகவும், கண் விழித்துப் பார்த்த போது இராமானுஜர் தாம் தமிழகத்தின் தெற்கு வீடான மோட்ச வாயிலில் இருப்பதையறிந்த ஒரு கனம் பெருமானின் திருவுள்ளக் கருத்தை அறிந்து மீளவும் தமது திருப்பணிகளைத் தமிழகத்திலேயே தொடங்கியதாகவும் வரலாறு. இராமானுஜருக்கு வடுக நம்பி என்பவரே தினமும் திருமண் இட்டு அலங்கரிப்பர். இராமானுஜர் பாறையில் இருந்து துயில் நீத்து எழுந்து வடுகநம்பியேவாருமென்ன, திருக்குறுங்குடி எம்பெருமானே வடுக நம்பியாக வந்து இராமானுஜருக்குத் திருமண் இட்டு அலங்கரித்தார். சிலநாள் கழித்து கேரளத்து எல்லைக்குள் இராமானுஜரைக் காணாது எங்கும் தேடி திருக்குறுங்குடியடைய, இவரின் வருகையைக் கண்ட இராமானுஜர் மிகவும் அதிர்ந்து போனார். வடுக நம்பியின் வடிவில் இராமானுஜருக்குத் திருமண் இட்டவர் திருக்குறுங்குடி பெருமாளேயாவார். இந்த வரலாற்றை இராமானுஜரின் வரலாற்றில் மிக விரிவாய்க் காணலாம். ஆழ்வார்களில் குலசேகர ஆழ்வாரை ஈந்தருளியது மலையாளமே ஒரு காலத்தில் சேரநாடாக இலங்கிய இப்பகுதிக்கு குலசேகரர் மன்னராய் விளங்கி சோழ பாண்டியர்களையும் வென்று பேரரசராய் விளங்கினார். இவர் திருமாலின் மீது பற்றுக் கொண்டு அவருக்கே அடிமைபூண்டு அரசு துறந்து ஆழ்வார் ஆனார். மன்னராக இருந்து பதவிதுறந்து ஆழ்வார் ஆனவர் இவரொருவரே. அம்மட்டுமன்று ஆழ்வார்களில் எவருக்குமே பெருமாள் என்னும் பெயரில்லை. பெரிய பெருமாளாகிய இராமபிரானிடத்தில் இவர் பேரன்பு பூண்டொழுகியதால் இவரை குலசேகரப் பெருமாள் என்றே அழைத்தனர். இவருடைய திருமொழிக்கும் பெருமாள் திருமொழி என்றே பெயர். இப்பெருமை மலையாளத்திற்கு மட்டுமே உண்டு. |