இவைகளில் கருடாழ்வார் திருஉருவம் விளக்குகள் அமைக்கப்பட்டு பொலிந்து தோன்றுகின்றன. திருவல்லாவில் அமைந்துள்ள துவஜஸ்தம்பம் மிகப்பெரியதாகும். இங்குள்ள ஸ்தலங்களில் மூலஸ்தானத்திற்கு முன்புறம் சதுரவடிவிலான மேடை ஒன்று இருக்கும். இதைப் பொதுவாக பலிபீடம் என்று கூறுவர். இது சில ஸ்தலங்களில் பிரம்மாண்டமானதாயும், சிலவற்றில் சுமாரானதாயும் அமைந்துள்ளது. இந்த மேடையின் முன்பு நின்றுகொண்டுதான் பகவானை வழிபட வேண்டும். மேடையில் ஏற யாரையும் அனுமதிப்பதில்லை. பகவானின் பூஜையில் ஈடுபடும் போத்திகள் மட்டும் இந்த மேடையின் மீதேறி சாஷ்டங்கமாய் விழுந்து எம்பெருமானுக்கு நமஸ்காரம் செய்துவிட்டு பூஜையில் ஈடுபடுவர். இங்கு கோவிலுக்குள் சட்டை, பனியன் அணிந்து செல்லக்கூடாது. கைலிகளும் கட்டிக்கொண்டு செல்லக்கூடாது. கைகளில் மூட்டை முடிச்சுகள், பை போன்றன கொண்டுசெல்லக்கூடாது. அவைகளை வாசலில் உள்ள கோவில் ஊழியர்களிடம் ஒப்படைத்துவிட்டு திரும்ப வரும்போது பெற்றுக்கொள்ளலாம். இதற்கு கட்டணம் இல்லை. மன்னன் முதல் சாதாரண மனிதர் வரை எத்தகைய பெரிய மனிதராக இருந்தாலும் சட்டை அணிந்து செல்ல அனுமதி கிடையாது. பாரம்பர்யமாகப் பின்பற்றப்படும் இந்த மரபு மிகவும் போற்றத்தக்கதாகும். இத்தகைய சீறிய முறை தமிழகத்தில் பின்பற்றப்படாதது ஒரு பெரிய குறையே. இங்கு நம்நாட்டைப் போல் ஸ்ரீவைஷ்ணவர்களால் பெருமாள் ஆராதிக்கப்படுவதில்லை. நமது பெருமாளும் நமது பிராட்டியும் நமது கருடாழ்வாரும் தான் இங்கு எழுந்தருளியிருக்கின்றனர். ஆனால் பூஜை வைப்பவர்கள் எம்பெருமானின் சின்னங்களான திருமண் தரித்து தேஜசுடன் தோன்றும் வைணவர்கள் அல்ல. இங்கு பூஜை செய்பவர்கள் போத்திகள் எனப்படுவர். இவர்கள் மலையாள பிராம்மணர்கள் என்றும் அழைக்கப்படுவர். இவர்கள் தூய்மையான பக்தியோடு விடிகாலே எழுந்து நீராடி ஈரத்துணியோடு பூஜை செய்யவருவர். நமது தமிழகத்து எம்பெருமான்களைப் போன்று தீர்த்தம், துளசி சடாரி கொடுத்து இப்பெருமான்கள் நம்மை அனுப்புவதில்லை. இங்கு பிரஸாதமாக துளசி, புஷ்பம், சந்தனம் போன்றவற்றை ஒரு சிறிய வாழை இலையில் வைத்து தமது கைபடாமல் தருகிறார்கள். பொங்கல், சுண்டல் எல்லாம் இங்கு கிடையாது. இங்கு நடைபெறும் வழிபாட்டுக்கு ஆராட்டு என்று பெயர். தினந்தோறும் பெருமாளுக்கு அபிஷேகம் உண்டு. |