பக்கம் எண் :

395

மலையாள திவ்ய தேசங்கள் ஒரு விளக்கம்

     ‘வேழமுடைத்து மலைநாடு என்று போற்றப்படும் மலையாளத்திற்குச்
சென்றதும் நமக்கு நினைவிற்கு வருவது இயற்கையின் எழில் கொஞ்சும்
கோலங்களே. மலையாள திவ்ய தேசங்கள் யாவும் எழிலான சூழ்நிலையிலேயே
அமைந்துள்ளன. கோவில்களில் தூய்மை என்றால் அவ்வளவு தூய்மை.
இத்தகைய தூய்மையினை நம் தமிழகத்தின் ஒரு சில சன்னதிகளில் கூட காண
முடியாது. இங்கு கோவில்களை அம்பலம் என்றே அழைக்கின்றனர். அம்பலம்
என்ற சொல்லே தமிழ்ச் சொல்தான். தமிழ்நாட்டில் எத்தனையோ சிவ
ஸ்தலங்கள் அம்பலம் என்ற சொற்றொடர் கொண்டே முடிகிறது. வைணவ
திவ்ய தேசங்களிலும், திருத்தெற்றியம்பலம் என்று ஒரு திவ்ய தேசத்திற்குப்
பெயருண்டு. இச்சொல் தமிழில் இருந்து மலையாளம் புகுந்த சொல்லாகவே
இருக்கலாம்.

     தமிழ்நாட்டில் உள்ளது போன்ற கோபுரங்களையும் விமானங்களையும்
அதனில் தீட்டப்பட்ட சிற்பங்களையும் இங்கு காண்டல் அரிது. மலையாளத்து
திவ்ய தேசங்கள் சதுரவடிவில் அமைந்தவை. நான்கு வாசல்கள் கொண்டதாக
நாற்புரம் சூழ்ந்த சுற்றுச் சுவர்களால் அமைக்கப்பட்டவை. இதற்குள் வட்ட
வடிவமான மூலஸ்தானம். மூலஸ்தானத்தின் மேல் முக்கோண வடிவில்
தொப்பியைக் கவிழ்த்து வைத்தது போன்றது கூரைகள். புணல் ஒன்றைக்
கவிழ்த்து வைத்தது போன்ற அமைப்புக் கொண்ட மூலஸ்தானங்களும் உண்டு.

     இவ்வமைப்புக்கொண்ட கோவில்களில் தூய்மை நிறைந்த சுற்றுப்புற
நடைபாதைகள் இந்த நடைபாதையில் அமைந்துள்ள தூண்களில் ஒவ்வொரு
தூணுக்கும் ஒருபாவை விளக்கு ஏந்திய பெண்ணின் சிற்பமும் அமைந்திருக்கும்.

     இத்தகைய அமைப்புக்கொண்ட சன்னதிகளின் உட்புறத்தே மிகச் சிறிய
அளவில் அமைந்த மேற்கூறிய அமைப்பையொத்த சிறிய ஆலயங்கள். இதில்
சில சன்னதிகளில் தாயார் மிகச் சிறிய உற்சவ மூர்த்தியாக பெருமானுக்கு
அருகிலேயே அமர்ந்த திருக்கோலம். இதேபோல் இங்கு உற்சவர்களும்
இல்லை. பிரகார ஊர்வலங்களில் உற்சவருக்குப் பதிலாக வேறு மூர்த்திகளே
வலம் வருவர். இங்கு நடைபெறும் பிரகார ஊர்வலத்திற்கு ஸ்ரீவள்ளி என்று
பெயர்.

     அதே சமயம் தமிழ்நாட்டில் அமைந்துள்ளது போன்று பெரிய
துவஜஸ்தம்பங்கள் (கொடிமரங்கள்) இங்கு உண்டு.