பக்கம் எண் :

481

     இந்நிகழ்ச்சி நடைபெறுவதற்கு வெகு காலத்திற்கு முன்பே ரோமச
முனிவர் என்பார் இங்கு தவஞ்செய்கையில் அவரது சீடன் சத்தியவான்
என்பவன் இங்குள்ள அகநாச தீர்த்தத்தில் நீராடிக் கொண்டிருக்கும் போது,
அத்தீர்த்தக் கரையின் மறுபக்கத்தில் ஒரு மீனவன் மீன்களைப் பிடித்து
கரையில் உலர்த்திவிட்டு மீண்டும் வலை வீசும்போது அவனுக்குப் பின்னால்
இருந்து பாம்பு தீண்ட அவ்விடத்திலேயே இறந்து போனான். அவன் இறந்த
சில நிமிடங்களிலேயே வானுலகிலிருந்து வந்த தேவவிமானத்தில் ஏறி அந்த
வேடன் சுவர்க்கம் சென்றான்.

     இதைக்கண்ட சத்தியவான் உடனே தன் குருவை அணுகி நடந்த
விருத்தாந்தத்தைக் கூறி, உயிர்களைக் கொல்லும் புலைஞனாகிய வேடனுக்கு
சுவர்க்கம் எவ்வாறு கிட்டியதென்று கேட்க, தம்ஞான திருஷ்டியால் ரோமசர்
பின்வருமாறு கூறலானார்.

     முன் ஜென்மத்தில் விதர்ப்ப நாட்டின் விசுவசகன் என்னும் அரசனின்
மைந்தன் தர்மத்தில் மிகவும் பற்றுள்ளவனாகவும், அனேக புண்ணிய
காரியங்களைச் செய்து வருபவனாகவும் இருந்தான். இருப்பினும் துஷ்ட
சிநேகிதர்களின் நட்பால் அவ்வப்போது துன்மார்க்கத்திலும் ஈடுபட்டு வந்தான்.
தனது பாவத் தன்மையால் முன் ஜென்மத்தில் நரகம் பெற்ற இவன், இந்த
ஜென்மத்தில் அவன் செய்த புண்ணியத்தால் இத்திருத்தலத்தில் உயிர்நீக்கும்
பேறு பெற்றான்.

     இத்திருப்பதியில் உயிர் நீத்ததால் மோட்சம் செல்லும் மகிமை பெற்றான்
என்று இத்தலத்தின் மேன்மையை ரோமசர் கூறினார்.

மூலவர்

     விஜயாசனப் பெருமாள் வீற்றிருந்த திருக்கோலம் கிழக்கே
திருமுகமண்டலம்.

தாயார்

    வரகுணவல்லித்தாயார், வரகுணமங்கைத் தாயார்.

தீர்த்தம்

     அகநாச தீர்த்தம், அக்னி தீர்த்தம்

விமானம்

     விஜயகோடி விமானம்

காட்சி கண்டவர்கள்

     அக்னி, வேதவித், ரோமசர்.