பக்கம் எண் :

499

தீர்த்தம்

     குபேர தீர்த்தம், நிதித் தீர்த்தம் தாமிரபரணியாறு.

விமானம்

     ஸ்ரீ கர விமானம்

காட்சி கண்டவர்கள்

     குபேரன், நவநிதிகள் மதுரகவியாழ்வார்.

சிறப்புக்கள்

     1. இழந்த செல்வத்தைப் பெற இப்பெருமானை வழிபட்டால் இயலும்
என்ற நம்பிக்கை உண்டு. பிரம்மாண்ட புராணத்திலேயே இதற்கொரு கதை
பேசப்படுகிறது.

     வியாச வம்சத்தில் வந்த தர்ம குப்தன் என்பவன் 8 ஆண்
குழந்தைகளையும், இரண்டு பெண் குழந்தைகளையும் பெற்று மிகுந்த
தரித்திரனாக ஆகி, வறுமையினின்றும் மீள முடியாத நிலையேற்பட தமது
குலகுருவாகிய நர்மதா நதிக்கரையில் தவஞ்செய்து கொண்டிருந்த பரத்வாஜ
முனிவரைச் சரணடைய, தமது ஞானக்கண்ணால் நடந்ததையறிந்து,
தர்மகுப்தனை நோக்கி, முற்பிறவியில் பெருஞ் செல்வத்திற்கு அதிபதியான
ஒரு அந்தணனாகப் பிறந்த நீ, யாருக்கும் ஒரு தர்மமும் செய்யாது,
பணத்தாசை பிடித்து அலைந்து திரிபவனாயிருந்தாய், உன் ஊர் அரசன்
உன்னிடம் வந்து உனக்குள்ள செல்வம் எவ்வளவு யென்று கேட்க, நீ
ஒன்றுமில்லை என்று பொய் கூறினாய் இதனால் உன் செல்வம் முழுவதும்
கள்வர்களால் அபகரிக்கப்பட்டு, மன நோயால் பீடிக்கப்பட்டு இறந்தாய்.

     பிராமணனாகவே இப்பிறவியில் பிறந்தாலும் உன் பழவினை உன்னைத்
தொடர்கிறது. இதற்கு ஒரே மார்க்கம், நவநிதிகளும் சரணடைந்துள்ள,
திருக்கோளுர் வைத்தமாநிதியைத் தொழுதால் உனது சாபந் தீருமென்று
கூறினார்.

     தர்ம குப்தனும் அவ்விதமே வந்து (தன் குடும்பத்துடன்) வெகு காலம்
இப்பெருமானைச் சேவித்து எண்ணற்ற பணிவிடைகளைச் செய்து
கொண்டிருக்க, ஒரு நாள் நீராடச் செல்லுங்காலை மாதனங் கண்டெடுத்து,
மீளவும் பெருஞ் செல்வந்தனாகி நெடுங்காலம் சுகவாழ்வு வாழ்ந்திருந்தான்.