எல்லாம் இங்கு தீர்த்தமாடியதால் இந்த தீர்த்தத்திற்கும் “நிதித் தீர்த்தம்” என்றே பெயர் உண்டானது. முன்னொரு காலத்தில் தர்மத்தை (தர்ம தேவதையை) அதர்மம் தோற்கடித்தது. எங்கும் அதர்மம் பரவியது. தோற்றுப் போன தர்மம் இந்த நிதி வனத்திற்கு வந்து இப்பெருமானை அண்டி தஞ்சம் அடைந்திருந்தது. அதர்மத்தினால் உண்டான தொல்லை தாங்க முடியாத தேவர்கள், தர்மம் தஞ்சம் புக்கிருந்த இத்தலத்திற்கு வந்து சேர, அதை பின் தொடர்ந்து அதர்மமும் இங்கு வந்து சேர, தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் பெரும் யுத்தம் நடந்து, இறுதியில் எம்பெருமானின் அருள்பெற்ற தர்மம் வென்றது. இஃதிவ்வாறிருக்க, தன் தவறுணர்ந்த குபேரன் பரமசிவனின் பாதத்தில் வீழ்ந்து மன்னிப்புக் கோர, அதற்கவர் பார்வதியிடமே மன்னிப்புக் கோருமென்று கூற, குபேரன் உமையவளின் பாதம் பணிந்து மன்னிப்புக் கோரினான். குபேரனை நோக்கிப் பார்வதி கூறுகிறாள். நான் சபித்ததைப் போலவே உனக்கு இனிமேல் ஒரு கண்ணும் தெரியாது. உன் மேனியின் விகாரமும் மறையாது. ஆனால் நீ இழந்த நவநிதியங்களை மட்டும் பெற்று வாழ்தற்கு ஒரு உபாயம் உண்டு. உன்னைவிட்டுப் பிரிந்த நவநிதிகள் தாமிரபரணி நதி தென்கரையில் தர்மப் பிசுன ஷேத்திரத்தில் திருமாலைத் தஞ்சம் அடைந்துள்ளன. திருமாலும் அதன் மீது சயனித்துள்ளார். நீயும் அங்கு சென்று ஸ்ரீமந் நாராயணனைக் குறித்தே தவம் செய்து இழந்த நிதியினைப் பெறுக என்றாள். திருக்கோளூர் வந்து சேர்ந்த குபேரன், வைத்த மாநிதிப் பெருமாளைக் குறித்துப் பெருந்தவஞ் செய்து மன்றாடி நிற்க, ஒரு மாசி மாதம் சுக்லபட்ச துவாதசியில் எம்பெருமான் காட்சி கொடுத்து, “உன் தவத்தை நான் மெச்சினேன். இருப்பினும் செல்வம் யாவும் உனக்கு இப்போதே தரமுடியாது. கொஞ்சம் தருகிறேன் பெற்றுக்கொள்” என்று கொஞ்சம் செல்வத்தைத் தர அதைப் பெற்ற குபேரன் “இத்தகு நிதியாகிலும் வைத்திருக்கப் பெற்றோமே யென்று” எண்ணித் தன் இருப்பிடம் சேர்ந்தான். மூலவர் நிஷேபவித்தன், வைத்தமா நிதிப் பெருமான் புஜங்க சயனம் கிழக்கு நோக்கிய திருக்கோலம். தாயார் குமுதவல்லி, கோளுர் வள்ளி |