அவனையழிப்போம் என்று மஹாவிஷ்ணு கூற இறுதியில் அவ்வரக்கனின் தொல்லைகள் அதிகமாக விஷ்ணு அங்கே தோன்றி சக்ராயுதத்தை ஏவினான். அவனைத் துண்டு துண்டாக்கிய சக்ராயுதம் அப்பாபத்தைப் போக்கித் தன்னைச் சுத்தப்படுத்த நினைத்த மாத்திரத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகளை நினைக்க உடனே அவர்களும் வந்து புனிதப்படுத்தினர். சக்ராயுதத்தை புனிதப்படுத்திய மூன்று நதிகளும் எம்பெருமானை இவ்விடத்திலேயே இருந்து காட்சியருளவேண்டுமென்று கேட்க, அவர் தமக்கு மிகவும் ரம்யமான ஸ்தலம் இதுதானென்றும் இப்புரிக்கு வடேசுபுர மென்றும், இங்கிருக்கும் எனக்கு வடமஹாதாமா வென்றும் (வடபெருங்கோயிலுடையான்) என்றும் பெயர் விளங்கும். யான் இங்கு நித்யவாஸம் பண்ணுவேன். நீங்கள் மூவரும் உம்மில் ஒரு சக்தியை பிரித்து இங்கு தடாகங்களாக மாற்றிவிட்டுச் செல்லுங்கள், கலியுகத்தில் இச்சேஷத்ரம் மிகப்புகழையடையும் என்றும் கூறி திருநாடு புக்கார். வில்லிபுத்தூர் இஃதிவ்வாறிருக்க கங்கை கரையில் தவஞ்செய்து கொண்டிருந்த முனிவர்களில் சரப முனிவர் என்பவர் தமது பிராப்தகர்மத்தினால் வேடனாய் வந்து பிறந்து அப்போதும் தமது பூர்வ ஞான பலத்தால் தவமியற்றும் முனிவர்களை மறைந்து நின்று தாக்க, இதுகண்ட முனிவர்கள் இவனை விரட்டிக் கொல்ல நினைக்க அவன் தனது குருவை அடைந்து நடந்த விருத்தாந்தங்களைச் சொல்ல அவர் தமது ஞான திருஷ்டியால் இவர் மஹா ஞானியென்றுணர்ந்து இவருக்குத் தீங்கு இழைக்கக் கூடாதெனப் பணித்து, அவரைச் சமாதானப்படுத்தி உம்மைக் கொல்ல வந்த இவ்விருவரும் வராஹ ஷேத்ரத்தில் மன்னர்களாய்ப் பிறப்பர். அவ்வாறு பிறந்து வில்லன், கண்டன் என்றும் பெயர்பெற்று வேட்டைக்கு வரும் தருவாயில் ஒரு புலியைத் துரத்திக் கொண்டு வரும் போது இருவரும் தனித்தனியே புலியை விரட்ட காட்டிற்குள் பிரிய நேரிட்டு, புலியைத் துரத்தி சென்ற கண்டன் அதனோடு பொருது மடிய, மடியும் தருவாயில் நாராயண மந்திரத்தைச் சொல்லி மோட்சம் பெற்றான்: அவனைத் தேடி வந்த வில்லி பல இடங்களிலும் அலைந்து கண்டனைக் காண முடியாமல் அயர்ந்து தூங்க அவன் கனவில் வந்த பெருமாள் கண்டன் இருக்குமிடத்தை தெரிவித்து அவனுக்குச் செய்ய வேண்டிய இறுதிக்கடன்களை செய்துவிட்டு இக்காட்டையழித்து ஒரு திருநகரியை உண்டாக்க, அதுவும் நின் பெயரால் வில்லிபுத்தூர் என அழைக்கப்படும் என்று சொல்ல அவனும் அவ்விதமே செய்து இந்த வில்லிபுத்தூரை உருவாக்கினான். |