2. உறையூர் என்னும் திருக்கோழி
கோழியும் கடலும் கோயில் கொண்ட கோவலரே யொப்பர் குன்றமன்ன பாழியும் தோழுமோர் நான்குடையர் பண்டிவர் தம்மையுங் கண்டறியோம் வாழியரோ விவர் வண்ண மென்னில் மாகடல் போன்றுளர் கையில் வெய்ய ஆழியொன் றேந்தியோர் சங்கு பற்றி அச்சோ ஒருவர் அழகியவா (1762) பெரிய திருமொழி 9-2-5 |
என்று நாகபட்டினம் (திருநாகை) சுந்தர்ராஜப் பெருமாளை
மங்களாசாசனம் செய்யும் திருமங்கையாழ்வார், அப்பெருமானின் பேரழகானது
திருக்கோழியில் கோயில் கொண்டுள்ள பெருமானின் அழகுக்கு
ஒப்பானதாகும் என்று கூறுகிறார்.
எனவே நாகை எம்பெருமானின் பேரழகு இப்பெருமானின் அழகுக்கு
ஒப்பு என்று கூறுவதால் இவரே அவரினும் பேரழகு பொருந்தியவராகி,
தனக்கு ஒப்புமை கூறக் கூடியவர்களைத்தான் பெற்றிருக்கிறாரேயொழிய
தனக்கு மிக்காரில்லை யென்னு மாற்றான் செம்மாந்து திகழ்கிறார்.
இது நான் கூறும் கருத்தல்ல. ஆழ்வார்கள் விஷயம். இத்தகைய
பேரழகு கொண்டுள்ள திருக்கோழி என்னும் உறையூர் திருச்சி
நகருக்குள்ளேயே அமைந்துள்ளது. திருச்சி புகைவண்டி நிலையத்திலிருந்து
சுமார் 2 மைல் தொலைவு. திருச்சி பேருந்து நிலையத்திலிருந்து எண்ணற்ற
நகரப் பேருந்துகள் இந்த உறையூருக்குச் செல்கின்றன.
இப்பெருமானைச் சேவித்துவிட்டுக் காவிரியாற்றைக் கடந்து
அரங்கனைச் சேவிக்க ஸ்ரீரங்கத்திற்கு நடந்தே செல்லலாம். அரங்கனை
சேவித்துவிட்டு கொள்ளிடத்தைக் குறுக்காக கடந்தும் உத்தமர் கோவில்
என்னும் புருஷோத்தமன் எழுந்தருளியுள்ள திருக்கரம்பனூருக்கு நடந்தே
செல்லலாம். அங்கிருந்து திருவெள்ளறையும் அரைப் பொழுதில் நடந்தே
செல்லலாம். முன் காலத்தில் இவ்வாறு நடந்துதான் சென்றனர்.
இவ்வூர் உறையூர் என்றும் உறந்தை என்றும் நிகளாபுரி என்றும்
அழைக்கப்படும். சோழர்கட்குத் தலைநகராக இருந்த