பக்கம் எண் :

569

94. திருப்புல்லாணி

     “வில்லால் இலங்கை மலங்கச்சரம் துரந்த
          வல்லாளன் பின்போன நெஞ்சம் வருமளவும்
     எல்லாரும் என்றன்னை ஏசிடினும் பேசிடினும்
          புல்லாணி எம்பெருமான் பொய் கேட்டு இருந்தேனே”
                         (1782) பெரிய திருமொழி 9-4-5

     என்று எம்பெருமான் மீது காதல் கொண்டார் திருமங்கையாழ்வார்.

     தன்நிலை துறந்து பெண்மை நிலை எய்தினார். பரகாலன் நாயகியாக
மாறிவிட்டார். தன்னைப் பெண் தன்மையில் வைத்துக் கொண்டு சொல்லுகிறார்.

     “வில்லால் இலங்கை மாநகரையே கலக்கமுறச் செய்யுமாறு அம்புகளை
ஏவிய மாவீரனான ராமனின் பின்னே போய்விட்டது என் நெஞ்சம்.
அதுதிரும்பிவரும்வரை யார் பழித்தாலும் சரி, ஏசினாலும் சரி, எம்பெருமானின்
பொய் வார்த்தையைக் கேட்டுக்கொண்டு நான் நம்பியிருப்பேன் என்கிறார்.
(பொய்ச் சொல்லாயினும் சரி, அவன் திருவாயினின்று வந்தால் போதும்
அதுவே தனக்கு உகப்பு என்கிறாள் பரகால நாயகி)

     இவ்விதம் திருமங்கையாழ்வாரால் பாடிப் பரவசிக்கப்பட்ட இத்தலம்
பாண்டி நாட்டுத் திவ்ய தேசங்கள் 18இல் மிகவும் தொன்மையும்
முக்கியத்துவமும் வாய்ந்ததாகும். இத்தலம் இராமநாதபுரத்திலிருந்து தெற்கே 8
கி.மீ. தூரத்தில் உள்ளது.

     இத்தலவரலாறு வியாசபகவானால் எழுதப்பட்ட 18 புராணங்களில்
ஒன்றான ஆக்கினேய புராணத்தில் 9 அத்தியாயங்களில் பேசப்படுகிறது.

     திரேதாயுகத்தின் விபவ அவதாரமான இராமாவதாரத்திற்கும் முற்பட்டது
இத்தலம், ஸ்ரீ இராமனின் தந்தை தசரதனால் பூஜிக்கப்பட்டதெனில் தொன்மை
எழுத்தில் அடங்குந் தன்மையதன்று.

     சீதையைக் கவர்ந்து சென்ற இராவணனைக் கொல்லற் பொருட்டு
இராமபிரான் வானர சேனையுடன் புறப்பட்டுச் சென்று தென்கடற்கரையடைந்து
(சேதுக்கரை) கடலைக்கடக்க உபாயஞ் சொல்லவேண்டும்மென்று
அக்கடலரசனான வருணணைப் பிரார்த்தித்து 7 நாட்கள் பிரயோபவேசமாக
(தர்ப்பைப்