பக்கம் எண் :

572

     பக்திச் சிரத்தையோடு வலம் வந்தால் ஏற்படு நன்மைகளைப் பற்றிக்
கீழ்க் காணும் கவிதை விளக்குகிறது.

     “பெருவயிறு கண்டமாலை, உதரவலி
          அண்ட வாயு, பிரமியகிரந்தி, சூலை, தலைநோவும்
     இருமலொடு, தந்தவாயு, குருடு, செவிடு, சொல் ஊமை
          இவைகள் முதல் தொந்த ரோக வினையாவும்
     ஒருநொடியில் அஞ்சி ஓடும் வறுமையொடு சஞ்சிதாவி
          யுபரியனடைந்த பாவம் அவைதாமும்
     மருமலர் பிறந்த கோதை மருவி மகிழ்புலாணி
          வளர் அரசு கண்ட பேரை அணுகாவே”

     5. இத்தலத்தைப் பற்றி திருஞான சம்பந்தர் “அணையில் சூழ்கடல்
அன்றடைத்து வழி செய்வதவன்” என்றும் “கடலிடை மலைகள் தம்மால்
அடைந்த மால்களும் முற்றி” என்று திருநாவுக்கரசரும் தம் பதிகங்களில்
புகழ்ந்துய்ந்தனர்.

     6. தர்ப்பசயன ராமன், ரசாயனச் சத்து பொருந்திய சக்ர தீர்த்தம்
இவ்விரண்டும் இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.

     7. ஆதிஸேது, என்றழைக்கப்படும் சேதுக்கரை இங்கிருந்து 4 கி.மீ.
தொலைவில் உள்ளது. ரத்னாகாரம் என்றும் இதனை அழைப்பர். ஸேது என்ற
வட சொல்லுக்கு “அணை” என்று பெயர். எனவே ஸ்ரீ வைஷ்ணவர்கள் இந்த
சேதுவைத் “திருஅணை” என்பர். ஒரு காலத்தில் இந்த ஸேதுவே (திரு
அணை) இந்தியாவின் தெற்கெல்லையாகத் திகழ்ந்தது என்பதை “ஆதிஸேது
ஹைமாசலம்” என்று பழங்கால நூல்களில் கூறுவதிலிருந்து அறியலாம்.

     கண்ணன் திருமேனிபட்ட பிருந்தாவனம் என்ற நெருஞ்சிக்காடு புனிதம்
பெற்றது போல், இராமனின் சம்பந்தத்தால் இந்த ஸேதுவும் மேன்மை
பெற்றது. இந்த ஸேதுக் கரைக்குப் பக்கத்தில் கடலுக்குள் கிழக்கே சற்று தள்ளி
ராமன் கட்டிய அணை என்று கூறப்படும் நீண்டதொரு “கல் அரண்”
தென்படும். இதன் அருகில் சென்று பார்ப்பது சகல பாவங்களையும் போக்கும்.
என்று சொல்லப்படுகிறது.