பக்கம் எண் :

607

     ப்ரபாவ நூலில் பேசியிருப்பதிலும் பொருத்தமுள்ளது.

     இவ்வண்ணமாக நூற்றெட்டுத் திருப்பதி ப்ரபாவ நூல்களில்
திருப்பிரிதிபற்றிக் கூறியுள்ள விபரங்கள் ஆழ்வார் பாசுரங்களோடும்
பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானத்தோடும் ஒத்திருக்கையாலே பாரதத்தின்
வட எல்லையில் இமயத்தினுள்ளே மானஸரோவர தீர்த்தத்தில் உள்ளதொரு
அடர்ந்த காடே திருப்பிரிதியென்று பெயர் பெற்றிருந்ததென்றும், அதில்
எம்பெருமான் பரமபுருஷன் என்னும் திருநாமத்தோடு பரிமளவல்லி
நாச்சியாரோடு ஆதிசேட சயனத்திருக் கோலத்தில் எழுந்தருளியுள்ளார்
என்பது வெள்ளிடை மலையாக விளங்குகிறது.

     திருப்பிரிதி என்னும் திருநாமம் எவ்வாறு வந்துள்ளதெனில், பதரி
கண்டம் முதலான வடநாட்டுத் திருப்பதித் திருநாமங்களைப் போல இதை
வடமொழி பெயராகக் கொண்டு பிரீதி எனவழைத்து காலப்போக்கில் பிரிதியாக
மருவியுள்ளதாகக் கருதலாம். எம்பெருமான் பிரீதியுடன் (உகப்புடன்)
எழுந்தருளியிருக்கும் இடம் என்றபடி,

     ஏ) அல்லது இத்திருநாமம் தமிழர்கள் இட்ட திருப்பெயரே எனக்
கொண்டால் பாரத தேசத்தை, தேசாந்திரத்திலிருந்து பிரிக்குமிடமாகையாலே
பிரிதி என்று பெயரிட்டதாகக் கொள்ளலாம். உகந்தருளின நிலங்களுக்கு
எல்லை என்று பெரியவாச்சான் பிள்ளை பிரிதியைக் குறிப்பிட்டிருப்பது இப்படி
பொருள் கொள்ள இடமளிக்கிறது. மானஸரோவரம் பாரதத்தின் வட
எல்லையென்று இதிஹாச புராணங்களில் காட்டப்பட்டிருப்பதும் இப்படி
பொருள் கொள்வதற்குப் பொருந்தியிருக்கிறது.

     இந்த மானஸரோவரக் கரையில் திருப்பிரிதி எங்கோ இருக்க வேண்டும்
என்பதுதான் தெளிவு.

     3. திருமங்கையாழ்வாரால் மட்டும் 10 பாக்களில் மங்களாசாசனம்.
திருமங்கை தமது மங்களாசாசனத்தை இங்கிருந்துதான் துவங்குகிறார்.