100. திருவதரியாச்சரமம் (பத்ரிநாத்)
வண்டு தண்டே னுண்டு வாழும் வதரி நெடுமாலை கண்டல் வேலி மங்கை வேந்தன் கலிய னொலி மாலை கொண்டு தொண்டர் பாடி யாடக் கூடிடில் நீள் விசும்பில் அண்டமல்லால் மற்ற வர்க்கோர் ஆட்சி யறியோமே (977) பெரிய திருமொழி 1-3-10 |
வண்டுகள் ரீங்காரம் செய்து குளிர்ந்த மலர்களிலிருக்கும் மதுவை
உண்டு மகிழும் அழகிய பூக்கள் சூழ்ந்து திகழும் பத்ரி எனப்படும் இடத்தில்
எழுந்தருளியுள்ள நெடுமாலைப் பற்றி மங்கை நாட்டின் வேந்தனான கலியன்
சொன்ன பாடல்களை கூட்டமாய்ச் சேர்ந்து ஆடிப்பாடும் தொண்டர்கள்
நீள்விசும்பில் பரமபதம் எனப்படும் வைகுந்தத்தில் சென்று ஆட்சி
செய்திருப்பார்கள் என்று திருமங்கையாழ்வாரால் பாடப்பட்ட இத்தலம்
வடநாட்டுப் பதிகளில் மிக முக்கியமான பத்ரிகாச்ரமம் எனப்படும் பெரும்
திவ்ய தேசமாகும்.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 10,500 அடி உயரத்தில் இமய மலையில்
பனிக்குன்றுகட்கு மத்தியில் பனிபடர்ந்த சூழலில் இலந்தை மரக்காடுகள்
நிறைந்து விளங்கும் இடத்தில் அமைந்துள்ளது. பத்ரி என்றால் இலந்தை
என்று பொருள்.
வரலாறு
எம்பெருமான் தானாக சுயம்புவாக எழுந்தருளியிருக்கும் இடமாகவும்,
மோட்சத்தைத் தரத்தக்க ஸ்தலங்களில் ஒன்றாகவும் அமைந்துள்ள இத்தலம்
பற்றி தனி நூலொன்றே யாக்கும் அளவிற்கு வடநாட்டுப் புராணங்களும்,
வடநாட்டு நூல்களும் குறிப்புக்களை வாரிவாரியிறைக்கின்றன.
இங்குதான் பெருமாள் தாமே குருவாகவும், சீடனாகவும் இருந்து
கொண்டு திருமந்திர உபதேசத்தை செய்தருளினான். ஓம் நமோ நாராயணாய
என்ற மந்திரத்தை நாராயணன் என்ற திருநாமத்துடனே வந்து உலகத்திற்கு
உகந்தருளின இடம் இந்த தலமாகும். திருமந்திரம் பகவான் மூலமாகவே
வெளியான இடம்.